நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வின், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட 71 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்து வருகிறது. 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி 25ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம என 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் முதற்கட்டமாக 71 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், கலைத்துறையில் சிறந்த பங்களிப்பிற்காக தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
