Skip to content

பொதுமக்களின் 348 மனுக்கள்- நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (28.04.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 348 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமியால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக, அரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் 3- (அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம்) தீயணைப்பு மீட்புபணிகள் நிலையங்களுக்கு எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்றும் சாலை விபத்துகளில் இடிபாடுகளில் சிக்கிகொண்டவர்களை

உடனடியாக மீட்பதற்கு ஏதுவாக Smoke Exhauster, Portable Electrically Operated Chain Saw, Battery operated Combi tool, Chipping Hammer, Cow Rescue Net, Torch Light, Search Light, Miner Head Lamp, Manila rope ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து வாங்குவதற்கு பெரம்பலூர் கோட்டம், தீயணைப்பு மீட்புப்பணிகள் கோட்ட அலுவலரிடம் ரூ.5,01,010/- காசோலை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமியால் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 02 பயனாளிகளுக்கு தலா ரூ.6,700 மதிப்பில் எல்.பி.ஜி. பித்தளை தேய்ப்பு பெட்டிகளை வழங்கினார். பின்னர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அரியலூர் வட்டம், வாரணவாசி கிராம அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டருக்கு ரூ.1,00,000/-க்கான 200 எச்.டி செட்டாப் பாக்ஸ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!