புதுக்கோட்டை, ஆலங்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருமண தகவல் மையத்தில் மாப்பிள்ளை தேடி வந்தார். அதில், அந்த பெண் தன் விவரங்களை பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்து வேலூர் காந்திநகரைச் சேர்ந்த முகமது உபேஸ் (37) என்பவர், அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்டு, ‘திருமண தகவல் மையத்தில் புகைப்படத்தை பார்த்தேன். எனக்கு உன்னை மிகவும் பிடித்து இருக்கிறது’ என கூறினார். இதையடுத்து, அந்த பெண்ணிடம், உபேஸ் நேரில் சந்திக்க ஆசைப்படுவதாக கூறினார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் சந்திக்கலாம் என உபேஸ் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி, சென்னை வந்த அந்தப்பெண் ராயப்பேட்டையில் உபேசை சந்தித்தார். அப்போது உபேஸ், தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றும், நகையை கொடுக்கும்படியும், திருமணத்தின் போது திரும்ப கொடுத்து விடுவதாகவும் கூறி உள்ளார். இதை நம்பிய அந்த பெண் தான் அணிந்திருந்த 20 பவுன் நகையை உபேசிடம் கொடுத்தார். இதன்பின்பு, உபேஸ் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அப்போது தான், உபேசால் தான் ஏமாற்றப்பட்டதை அந்தப்பெண் உணர்ந்தார். இதைத்தொடர்ந்து அண்ணாசாலை போலீசில் அந்தப்பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்ததில் உபேஸ், சேலம், கோவை பகுதியில் சுற்றி திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது கடைசியாக ஈரோட்டில் வைத்து தனிப்படையினர் உபேஸை கைது செய்து, சென்னை கொண்டு வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நீண்ட நாள் திருமணம் ஆகாத பெண்கள், விதவை பெண்களை குறிவைத்து திருமணம் ஆசை காட்டி நகை-பணம் வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 1½ பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.