தனக்கு நேர்ந்த துன்பத்தை வெளியே சொல்ல முடியாத திருடன் கதையை சொல்ல வேண்டுமானால், திருடனுக்கு தேள் கொட்டியது போல என்ற ஒரு பழமொழியை சொல்வார்கள்.
இனி, உண்டியலில் சிக்கிய திருடன் கை போல என்று சொல்லும் அளவுக்கு தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம், இரவு ஒரு சம்பவம் நடந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது சேசம்பட்டி. இங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக இரும்பினால் ஆன ஒரு உண்டியல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உண்டியலில் காணிக்கை போடுவதற்காக சிறிய துவாரம் இருந்தது.
சவுளூர் என்ற கிராமத்தை சேர்ந்த தங்கராஜ்(42) என்பவர் நள்ளிரவு 12 மணிக்கு மேல், கோவிலுக்குள் சென்று உண்டிலுக்குள், கையை விட்டு உள்ளார். கை தாரளமாக உள்ளே சென்றது.
உண்டியலுக்குள் கிடந்த ரூபாய் நோட்டுகளை வாரிசுருட்டிக்கொண்டு மேலே கையை எடுத்தார். கை வரவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தார். கை வரவில்லை. பணத்தை உண்டியலுக்குள்ளேயே போட்டு விட்டு வெறும் கையை மட்டும் எடுத்து பார்த்தார். அப்படியும் கை வரவில்லை. விடிய விடிய முயன்று பார்த்தார். கை வரவில்லை.
இப்படியாக விடிந்து போனது. காலையில் கோயிலுக்கு வந்த பக்தர்கள், யாரோ ஒருவன் உண்டியலுக்குள் கையை விட்டபடியே அமர்ந்திருப்பதை பார்த்து ஊரைக்கூட்டினர். சிறிது நேரத்தில் அந்த கிராமமே திரண்டது. உண்டியல் திருடனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு படையினர் வந்து உண்டியலை உடைத்து திருடனின் கையே வெளியே எடுத்தனர். தயாராக இருந்த அதியமான கோட்டை போலீசார் தங்கராஜை பிடித்துக்கொண்டு சென்றனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.