சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டையை எடுத்துச்செல்லும்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பிடித்து வெடித்ததில் கஞ்சநாயக்கன்பட்டி, கொட்டமேடுவைச் சேர்ந்த செல்வராஜ் ( 29), குருவாலியூரைச் சேர்ந்த சிறுவர்கள் செல்வன். தமிழ்செல்வன் ( 11) த/பெ.சேட்டு மற்றும் செல்வன். கார்த்தி ( 11) த/பெ.சுப்பிரமணி ஆகிய மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொட்டமேடுவைச் சேர்ந்த லோகேஷ் (20) த/பெ.தங்கராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.