உதகை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார். 41 துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 9 பேர் மட்டுமே மாநாட்டில் பங்கேற்றனர். அந்த 9 பேரும் ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஆவர்.
துணை வேந்தர்கள் மாநாட்டில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் பேசிய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், “அரசியலமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்பட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநராக பதவி ஏற்கும் போது ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்தை தீவிரமாக கடைபிடிக்கிறார். நாட்டின் வளர்ச்சிக்கு கல்வித்துறை வளர்ச்சி அடைவது அவசியம். தீவிரவாதம் உலக அளவில் அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச அரங்கில் இந்திய பிரதமருக்கு இதுவரை இல்லாத வகையில் மரியாதை கிடைத்து வருகிறது.”இவ்வாறு பேசினார்.