காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற 4 தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், இத்தாக்குதலில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேறவும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது. காஷ்மீரில் முக்கியமான சுற்றுலா பகுதிகளில் ஒன்றான பஹல்காம் மாவட்டத்தின் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தீவிரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
பைன் மரக் காடுகள் வழியாக பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவிய தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளை பிடித்து அவர்களின் பெயரை கேட்டு கொடூரமாக சுட்டுக் கொன்றனர். இதில், 26 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். இவர்கள் 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நேபாளத்தை சேர்ந்த ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுதவிர 20 பேர் காயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக டெல்லியிலிருந்து புறப்பட்டு காஷ்மீர் சென்றாரசுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நாசவேலையின் பின்னணியில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பதால் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சார்க் விசா திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விசா பெற்று இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை 55இல் இருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தூதரக அதிகாரிகள் அனைவரும் வரும் மே 1 ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையும் குறைக்கப்படும். பாகிஸ்தானுடனான அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி டெல்லியில் நேற்று இரவு வெளியிட்டார்.
பாகிஸ்தானின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது. இதுகுறித்து அமித் ஷா,ராஜ்நாத் சிங் ஆகியோர் பல்வேறு கட்சி தலைவர்களுடன் பேசி வருகின்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
