Skip to content

திருச்சி உறையூரில் மீண்டும் குடிநீர் சப்ளை தொடக்கம்

திருச்சி மாநகராட்சி 8 மற்றும் 10-வது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகப் புகார் எழுந்தது. இந் நிலையில் உறையூர் மின்னப்பன் தெருவைச் சேர்ந்த லதா (60), மருதாம்பாள் (85) மற்றும் பிரியங்கா (4) ஆகிய 3 பேர் அண்மையில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய 11 பெண்கள், 8 குழந்தைகள் என 19 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 10-க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இதனால்  அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உறையூர் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் மருத்துவ முகாம்கள் அமைத்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், குடிநீரில் தொற்று ஏதுமில்லை என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சந்தேககத்துக்கிடமான பகுதியில் மொத்தம் 15 இடங்களில் குடிநீர் (மாதிரிகள்) எடுத்து அவை சோதனைக் கூடங்களில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. அவற்றில் தொற்றுகள் ஏதும் கண்டறியப்படவில்லை. குடிநீர் தொட்டிகளும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே நிறுத்தி வைக்கப்பட்ட குடிநீர் விநியோம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கியது.

ஆனால் உறையூரில் குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சி தொடர்ந்து தவறான தகவல்களை தருகிறது. உறையூரில் எங்கு பார்த்தாலும், கழிவுநீர் வாய்க்கால்களைக் கடந்தோ அல்லது அருகிலேயோதான் குடிநீர் குழாய்கள் செல்கின்றன. இதனால் எளிதில் கழிவு நீர் குடிநீரில் கலக்க வாய்ப்புள்ளது. அவற்றை முறைப்படுத்த வேண்டும். மேலும், கழிவு நீர் அடைப்பு குறித்து தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான இளநிலை பொறியாளர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!