சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து காலை 11.05 மணியளவில் ஆவடி நோக்கி மின்சார ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் நிலையத்தை தாண்டிய சிறிது தூரத்தில் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 12 பெட்டிகளைக் கொண்ட புறநகர் ரயிலில் நான்காவது பெட்டியில் நான்கு சக்கரங்களும் தண்டவாளத்திற்கு கீழே இறங்கி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. மிதமான வேகத்தில் ரயில் இயக்கப்பட்டதால் நல்வாய்ப்பாக பயணிகள் யாவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. உடனடியாக தகவலறிந்து ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் ரயில் தடம் புரண்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தடம் புரண்ட காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ராயபுரம் ரயில்வே பணிமனையில் இருந்து மீட்பு ரயில் வரவழைக்கப்பட்டு, தடம் புரண்ட ரயில் பெட்டியை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தடம் புரண்ட ரயில் பெட்டியை மீட்க ராட்சத ஜாக்கிகள் கொண்டு வரப்பட்டு, சுமார் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் ஜாக்கிகள் மூலம் சக்கரத்தின் கீழே சரிவு கட்டைகள் போட்டு தடம் புரண்ட ரயில் பெட்டியை தூக்கி ரயில் தண்டவாளத்தில் வைத்தனர். கடற்கரை ரயில் நிலையத்தில் நான்கு இருப்பு பாதைகள் இருப்பதினால் சர்வீஸ் சாலையை ஒட்டிய இந்த வழித்தடத்தில் விபத்து ஏற்பட்டதை அடுத்து ரயில் சேவைகள் எதுவும் பாதிக்கப்படாமல், அடுத்த இருப்புப் பாதைகளில் ரயில்கள் இயக்கப்பட்டன. இண்டரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் ரயில் சேவை சீரானது. பின்னர் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு தடம் புரண்ட ரயில் பெட்டியுடன் ராயபுரம் ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.