ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை அணையா ஜோதியேற்றி தள்ளுவண்டியுடன் பாதயாத்திரை செல்லும் ராமபக்தர் கரூர் வருகை – வட இந்திய ஸ்ரீராம பக்தர்கள் வழிபாடு முடித்து வழியனுப்பி வைத்தனர்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த லேஹராம் செனி என்ற ராமபக்தர் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை அணையா ஜோதி ஏற்றி பாதயாத்திரை செல்வதற்காக கடந்த மார்ச் 22-ஆம் தேதி கன்னியாகுமரியில் சிறப்பு பூஜைகள் செய்து அங்கிருந்து புறப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் வந்த அவர் புனித தீர்த்தத்தில் பூஜை செய்த பிறகு, அணையா ஜோதி என்ற விளக்கினை ஏற்றி
அங்கிருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை கரூர் வந்த அவருக்கு, கரூர் நகரை சேர்ந்த வட இந்திய ஸ்ரீ ராம பக்தர்கள் தங்குவதற்கு இடம் கொடுத்து, உணவு உபசரிப்பு வழங்கினர். தொடர்ந்து இன்று வழிபாடு நடத்திவிட்டு கரூரிலிருந்து வழி அனுப்பி வைத்தனர்.
தினமும் 35 கிலோமீட்டர் பாதயாத்திரை செல்லும் அவர், மாவட்டம் வாரியாக தங்கி ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் புறப்பட்டு செல்கிறார். கடந்த மார்ச் 22-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பாதயாத்திரியை தொடங்கிய ராமபக்தர் 3 மாத காலத்திற்குள் அயோத்தி சென்றடைவார் என்று தெரிவித்தனர்.
மேலும், நாட்டு நலனுக்காக தேசிய நெடுஞ்சாலையில் தனியாக பாதயாத்திரை செல்லும் அவருக்கு சில பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், அவருக்கு பொதுமக்களும், காவல்துறையினரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

