தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாலாயி அக்ரஹாரம், சிரமேல்குடியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். விவசாயி. இவரது மூத்த மகன் திவாகர். இவர் சிரமேல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பும், இரண்டாவது மகன் சுந்தர் 7ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி திவாகருக்கு பள்ளிக் கல்வித் துறையிலிருந்து பேசுவதாகவும், கல்வி உதவித்தொகை ரூ. 14 ஆயிரம் வந்திருப்பதாகவும் கூறி, ஜி பே மூலம் ரூ. 35 ஆயிரத்து 113 பறித்தனர்.
இது குறித்து ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு, இச்சம்பவம் தொடர்பாக டில்லியை சேர்ந்த அசுகுமார் (30), சபம் குமார் (22), அனுஜ்குமார் (22) ஆகியோரை கைது, தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் விரைவாக நடவடிக்கை எடுத்து, 3 பேரையும் கைது செய்த தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் அந்தோணியம்மாள், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி தலைமையிலான குழுவினரை தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ரா. ராஜாராம் பாராட்டினார்.
