Skip to content

கூட்டணி ஆட்சியா? எடப்பாடி திடீர் பல்டி – பாஜக அதிர்ச்சி

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா கடந்த  11ம் தேதி சென்னை வந்தார்.  அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியை  உறுதி செய்தார். பின்னர் எடப்பாடி  பழனிசாமி வீட்டில்  நடந்த விருந்தில் அமித்ஷா பங்கேற்றார். முன்னதாக  அமித்ஷா  சென்னையில் இந்தியில்  பேட்டி  அளித்தார். அதை  கருணேஷ் என்பவர் தமிழில் மொழி பெயர்த்து கூறினார். அந்த பேட்டியில் கூறியதாவது:

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்தித்து  வெற்றி பெற்று கூட்டணி  ஆட்சி அமைப்போம்.   தொகுதி பங்கீடு,  வெற்றிக்கு பின்னர்  அமைச்சரவை இடங்கள் ஒதுக்கீடு குறித்து  பின்னர் பேசி முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

தமிழ்நாட்டில் இதுவரை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள்  தனித்து தான் ஆட்சி அமைத்து உள்ளது. 2006ல்  திமுக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது  திமுகவுக்கு மட்டும் 96 இடங்கள் தான்  கிடைத்தது.  தனி மெஜாரிட்டிக்கு  22 இடங்கள் குறைந்தபோதும்  திமுக கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது புதிதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய்  புதிய கோஷமாக  எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு என அறிவித்தார். ஆனாலும் அவரது கட்சியுடன் கூட்டணிக்கு இன்றைய தேதிவரை ஒ ரு கட்சி கூட போகவில்லை.

எடப்பாடி பழனிசாமியும் திமுக கூட்டணியில் இருந்து எதாவது  கட்சிகள் வெளியே வரும் அவர்களுடன் கூட்டணி அமைக்கலாம் என  கருதி இருந்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் விஜய்யுடன் எடப்பாடி ரகசியமாக  கூட்டணிக்கு  பேச்சுவார்த்தை நடத்தினாராம். அப்போதும் விஜய், ஆட்சியில் பங்கு, ஆளுக்கு இரண்டரை வருடம் முதல்வர் பதவி என உறுதியாக கூறி விட்டாராம்.

கட்சி ஆரம்பித்து ஒரு தேர்தலை கூட சந்திக்காத விஜய்க்கு ஆட்சியில் பங்கா? என்ற நிலையில் தான்  பாஜகவுடன்  கூட்டணிக்கு  எடப்பாடி சம்மதித்தாராம்.  பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று பல அதிமுக உயர்மட்ட தலைவர்கள் வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் தான்  பாஜக, அதிமுக கூட்டணி ஏற்பட்டது.

இதுவரை தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைத்தது இல்லை. எடப்பாடி எப்படி இதற்கு ஒத்துக்கொண்டார் என்ற  எதிர்ப்பு அதிமுக தலைவர்கள், தொண்டர்களிடம் எழுந்தது.

கூட்டணி ஆட்சி என அமித்ஷா பேட்டி கொடுத்தபோது, அதை எடப்பாடியும் மறுக்கவில்லை. மறுநாள் அனைத்து ஊடகங்கள், செய்தித்தாள்களிலும்  கூட்டணி ஆட்சி என்ற தலைப்பில் தான் இது பெரிய செய்தியாக வந்தது. அப்போது எடப்பாடி அதை மறுக்கவில்லை.  இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு இன்று எடப்பாடி மறுத்து உள்ளாா்.

சட்டமன்றத்தில் இருந்து அதிமுகவினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.  அப்போது எடப்பாடியிடம் கூட்டணி ஆட்சி குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது எடப்பாடி கூறியதாவது:

அதிமுக, பாஜக கூட்டணியில்  மட்டுமே உள்ளது.  டெல்லிக்கு மோடி,  எனவும் தமிழ்நாட்டுக்கு நான் என்றும்  அமித்ஷா  எனது பெயரை குறிப்பிட்டு கூறினார்.   ஆட்சியில் பங்கு என அமித்ஷா கூறவில்லை.  கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறவில்லை.  நீங்க தப்பா புரிஞ்சுகிட்டேங்க.  கூட்டணி மட்டும் தான். கூட்டணி ஆட்சி இல்லை.  நீங்களாகவே ஏதாவது வார்த்தைகளைப் பிடுங்கி விறுவிறுப்பான செய்தியைத் தேடுகிறீர்கள். உங்கள் விஞ்ஞான மூளையைப் பயன்படுத்தாதீர்கள். அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்”  எங்கள் முடிவுகளில் தலையிட திமுகவுக்கு உரிமை இல்லை.

திமுகவை வீழ்த்த  அதிமுக  கூட்டணி அமைத்து இருக்கிறோம்.   கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு என்ன?

இவ்வாறு  அவர் கூறினார்.

எடப்பாடியின் இந்த திடீர் அறிவிப்பு பாஜக வட்டாரத்தில் பரபரப்பு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

error: Content is protected !!