இந்தியன் ஓபன் தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (15-ம் தேதி) தொடஙக்யது. ஒருநாள் சாம்பியன்ஷிப் போட்டியான இதில் ஆடவர் பிரிவில் 14 போட்டிகளும், மகளிர் பிரிவில் 14போட்டிகளும் இடம் பெறுகின்றன. சுமார் 400 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்று உள்ளனர். காலை 9 மணி அளவில் போட்டி தொடங்கியது இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த சுபா வெங்கடேஷன் (400 மீட்டர் ஓட்டம்), வித்யா ராம்ராஜ் (200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம்), நித்யா ராம்ராஜ் (100 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம்), பவித்ரா வெங்கடேஷன், பரணிகா இளங்கோவன், கவுதம், சிவா (போல்வால்ட்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்) உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த போட்டியின் மூலம் வரும் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ள 28-வது நேஷனல் ஃபெடரேஷன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கொச்சியில் நடைபெற உள்ள போட்டியில் இருந்து வரும் மே மாதம் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப்புக்கு இந்திய அணி தேர்வு செய்யப்படும். இத்தகவலை தமிழ்நாடு தடகள சங்கத்தின் செயலாளார் சி.லதா தெரிவித்துள்ளார்.