திருச்சி மாநகர க்ரைம் செய்திகள்…
ஸ்ரீரங்கம் ராகவேந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் (40) திருமணம் ஆகாதவர். இந்நிலையில் தொழில் நடத்துவது தொடர்பாக பல்வேறு இடங்களில் நிறைய கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட கீர்த்தி ராஜன் கடந்த 12 ந்தேதி வீட்டின் அறையில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையை பயன்படுத்தி கொக்கியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய கீர்த்தி ராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று 8வது கவுண்டரில் மலேசியா செல்ல பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது இமிகிரேசன் அதிகாரி ஒருவர் பயணிகளின் பாஸ்போர்ட் வாங்கி சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்து பார்த்த போது அதில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணியிடம் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து இமிகிரேஷன் அதிகாரி விசாரணை செய்தபோது மதுரை மாவட்டம் காமராஜர் புரத்தை சேர்ந்தவர் ஷபி அகமது (54) என்பது தெரிய வந்தது .மேலும் இவர் தனது பிறந்த தேதி மற்றும் மனைவி பெயர், சொந்த ஊர் ஆகியவற்றை போலியாக கூறி மோசடியாக பாஸ்போர்ட் பெற்று உள்ளது தெரிய வந்தது இதையடுத்து இமிகிரேசன் அதிகாரி முகேஷ் கௌதம் விமான நிலையம் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற ஷபி அகமதை கைது செய்துள்ளனர்.