மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று அரசு டாஸ்மாக் கடை, பார் மற்றும் மனமகிழ் மன்றங்களுக்கு விடுமுறை எனவும், மீறி மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் வாத்தலை காவல் சரகத்திற்கு உட்பட்ட சிறுகாம்பூர் புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரத்தில் இன்று காலை 11 மணியளவில் சிலர் சட்ட விரோதமாக அரசு டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.
அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் 2 மது பாட்டில் வாங்கியுள்ளனர். அப்போது விற்பனை செய்த நபர் பாட்டில் ஒன்றுக்கு இருநூற்று ஐம்பது ரூபாய் கேட்டதற்கு ஆத்திரமடைந்த இளைஞர்கள் நூற்றி எழுபத்தி ஐந்து ரூபாய் பாட்டிலை எப்படி அதிக விலைக்கு விற்கிறீர்கள் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த விலைக்கு வாங்க முடிந்தால் வாங்கு இல்லை என்றால் கடையில் போய் வாங்கிக்கொள் என்றார்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் மது விற்றவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட மற்ற மதுப்பிரியர்கள் தகராறை தடுத்து நிறுத்தி இளைஞர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் ஏதும் கொடுக்காமல் காயம்பட்ட மது விற்பனையாளர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தானாக கீழே விழுந்து விட்டதாக கூறி முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல சத்தம் போடாமல் மீண்டும் மது விற்பனையில் ஈடுபட்டிருக்கிறார்