நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகி சாட்டை துரைமுருகன் தரப்பினர் சிறு கத்தியை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்காததால், திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் வீ. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணை திருச்சி 4 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தின் நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஆஜராகும் வகையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த சீமான் விசாரணைக்கு பிறகு
மீண்டும் 1.30 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். அவருடன் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட வழக்கமான சோதனையில் அவர்கள் கொண்டு சென்ற கைப்பையில், நக வெட்டி ஒன்று இருந்துள்ளது. நக வெட்டியில் சிறு கத்தி மற்றும் சோடா பாட்டில் திறக்கும் (ஓப்பனர்) லிவர் ஆகியவையும் இணைந்திருந்தது. அதில் கத்தி இணைந்து இந்ததால் அதை, கை பையிலோ அல்லது ஆடைகளில் உள்ள பை (பாக்கெட்) களிலோ கொண்டு செல்ல அனுமதி இல்லை எனக்கூறி அவற்றை எடுத்துச் செல்ல பாதுகாப்புப்படை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் சீமான் தரப்பினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து நக வெட்டியை, எடுத்து உள்ளூர் கட்சி நிர்வாகியிடம் போலீஸôர் ஒப்படைத்தனர். அதன் பிறகு சீமான், துரைமுருகன் தரப்பினர் விமானத்தில் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது