அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற வளைகாப்பு விழாவில் தாம்பூல பையுடன் தர்பூசணி பழத்தை வழங்கிய பெற்றோர்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது விலை குறைவாக உள்ள விவசாய பொருட்களை அன்பளிப்பாக வழங்குவதன் மூலம் விவசாயிகளை பாதுகாக்க முடியும் என பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மருதூர் தெற்குப்பட்டியை சேர்ந்த மருத்துவர் கிருபாகரனுக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிங்காரவேலன் மகள் மருத்துவர் அபிநயாவிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மருத்துவர் அபிநயா 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவருக்கு இன்று மருதூர் தெற்குப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் பொதுவாக விழா நடத்துபவர்கள் விழாவிற்கு வரக்கூடியவர்களுக்கு, தேங்காய், ஆரஞ்சு, மரக்கன்றுகள் ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்குவது வழக்கம். ஆனால் மருத்துவர் அபிநயாவின் வளைகாப்பு விழாவில், விழாவிற்கு வந்த
உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, இரு வீட்டார் சார்பில் தாம்பூலப் பையுடன் தர்பூசணி பழத்தையும் அன்பளிப்பாக வழங்கியது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. கோடை காலத்தில் குளிர்ச்சி தரக்கூடிய தர்பூசணியை வழங்குகிறார்கள் என நினைத்து வாங்கி சென்ற பொதுமக்கள் மற்றும் உறவினர்களுக்கு, விழாவை நடத்தும் அபிநயாவின் தந்தை கூறிய காரணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து மருத்துவர் அபிநயாவின் தந்தை சிங்காரவேலன் கூறும்போது, தற்போதுள்ள கோடை காலத்தை ஒட்டி சாகுபடி செய்த தர்பூசணியை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அதிக அளவில் தர்பூசணி வருகையால் விலை குறைந்துள்ளது. மேலும் தர்பூசணியில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக வதந்தி பரவியதால் மேலும் விலை குறைந்து, விலை இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அறிந்த நான் தர்பூசணி விவசாயிகளுக்கு உதவிடும் வகையில், விழாவிற்கு வரக்கூடியவர்களுக்கு தர்பூசணி வழங்கலாமா என மணமகன் வீட்டாரிடம் சம்மதம் பெற்று, தற்போது விழாவிற்கு வருபவர்களுக்கு அன்பளிப்பு பொருளாக தர்பூசணியை வழங்கி வருகிறேன். இதே போல் அனைவரும் தங்கள் வீட்டு விழாக்களில், சுப நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, அப்பொழுது விவசாய விலைப் பொருட்களில் எது குறைவாக விற்கப்படுகிறதோ அதனை அன்பளிப்பு பொருளாக தரலாம். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என கூறினார்.
இதே கருத்தை அவரது மகள் அபிநயாவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.