Skip to content

கரூர்… மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி கோரிக்கை மனு…

கரூர் மாவட்டம், குளித்தலை வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

அந்த மனுவில் குளித்தலை வட்ட உள்நாட்டு மீனவர் சங்கம் சார்பில் சுமார் ஆயிரம் குடும்பத்திற்கு மேற்பட்டோர் காவிரி ஆற்றில் மீன் பிடித்து மாயனூர் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கதவணையின் அருகில் உள்ள தென்கரை வாய்க்கால் அருகில் மீன் மார்க்கெட் அமைத்து, மீன்கள் விற்பனை செய்து வருகிறோம்.

இந்த மீன் மார்க்கெட்டில் உயிர் மீன்கள் விற்பதால் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் மீன்களை வாங்கி செல்கின்றனர். மாயனூர் மீன் மார்க்கெட்டை நம்பி சுமார் ஆயிரம் மீனவ குடும்பங்கள் உள்ளன. இந்த மார்க்கெட் எங்களது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

தற்போது காவிரி குண்டாறு திட்டத்தின் கீழ் நாங்கள் விற்பனை செய்யும் இடத்தில் வாய்க்கால் ஓரமாக சறுக்கல் கட்டப்பட்டு வருகிறது. இந்த சறுக்கல் கட்டி விட்டால் மீன்களை வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்ய முடியாது. மீன்களை உயிருடன் விற்பனை செய்ய முடியாது. உயிர் மீன்கள் விற்பனை இல்லை என்றால் இங்கு யாரும் மீன் வாங்க வர மாட்டார்கள்.

வாய்க்கால் கரையோரம் சுமார் ஐந்து இடங்களில் படிக்கட்டு துறை கட்டி தருமாறு, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த பகுதிக்கு நீர் வசதியுடன் கூடிய மீன் விற்பனை நிலையம் நிரந்தரமாக அமைத்து தர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

error: Content is protected !!