திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், தோன்றிய வரலாற்றினை கணக்கிட முடியாத பழமையும் வாய்ந்த தலமாகவும் திகழ்கிறது. சிறப்புமிக்க இக் கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை உடையது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடக்கும், அதன்படி இந்த ஆண்டு இன்று(ஏப் 7) ஆயில்ய நட்சத்திரம் என்பதால் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.
ஆழி என்றால் கடல். கடல் போன்ற பெரிய தேர் என்பதை குறிக்கவே ஆழித்தேர் என்று அழைக்கப்படுகிறது. திருவாரூர் தேரழகு என்பது முதுமொழி. பங்குனி உத்திர திருவிழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம்.
தேரோட்ட விழாவையொட்டி நேற்று இரவு 10.45 மணியளவில் தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் திருத்தேரில் எழுந்தருளினார். விடிய விடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 5.20 மணிக்கு விநாயகர் தேரும், 5.30 மணிக்கு சுப்பிரமணியர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதன்பிறகு ஆழித் தேரோட்டம் காலை 8.50 மணிக்கு தொடங்கியது.
தேரோட்டத்தில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் திரண்டனர். ஆரூரா.. தியாகேசா என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஆழித்தேரை தொடர்ந்து, அம்பாள், சண்டிகேஸ்வரர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது..
விழாவையொட்டி திருவாரூர் நகராட்சியின் மூலம் பக்தர்கள் வசதிக்காக நகரின் தேரோடும் வீதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் வாகனம், நடமாடும் மருத்துவ வாகனத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்துகள் அடங்கிய குழு தயாராக தேரை பின் தொடர்ந்து செல்கிறது.
பெரும்பாலான தேர்களில் விமானங்கள் ஆறு பட்டை, எண் பட்டை அல்லது வட்ட வடிவங்களில் இருக்கும். ஆனால் திருவாரூர் ஆழித்தேர் பீடம் முதல் விமானம் வரை பக்கத்திற்கு ஐந்து பட்டைகள் வீதம் 20 பட்டைகள் உள்ளன. இது தனிச்சிறப்பு வாய்ந்தது. அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடி. விமானம்வரை தேர் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி உயரம் 48 அடி. விமானம் 12 அடி, தேர் கலசம் 6 அடி என மொத்தம் 96 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறது ஆழித்தேர்.
திருச்சி பெல் நிறுவனம் ஆழித்தேருக்கு இரும்பு அச்சுகள், நான்கு இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் வசதி உள்ளிட்டவற்றை அமைத்து தந்துள்ளது. அலங்கரிக்கப்படாத ஆழத்தேரின் எடை 220 டன் ஆகும். 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடையுள்ள அலங்கார துணி ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கிறார்கள்.
இது தவிர தேரின் முன்புறம் கட்டப்படும் நான்கு குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள், தேரின் நான்கு புறங்களிலும் கட்டப்படும் அலங்கார தட்டிகள் ஆகியவற்றின் எடை 5 டன். எனவே முழு அலங்காரத்தில் ஆழித்தேரின் எடை 350 டன்.
சுமார் 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட நான்கு வடங்கள் தேரில் பொருத்தப்படுகிறது. தேரை தள்ளுவதற்கு பொக்லின் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.