Skip to content

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா… கொடியேற்றம்…

ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பூலோக வைகுண்டம் எனப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 13-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. கொடியேற்றத்தையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இன்று அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் கொடிப்படம் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுடன் காலை 5.45 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நம்பெருமாள் காலை 6.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.

விழாவின் 2-ம் நாளான நாளை காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். 5-ந் தேதி ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 6-ந்தேதி தங்க கருடவாகனத்திலும், 7-ந் தேதி நம்பெருமாள் காலை சேஷவாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 8-ந்தேதி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன மண்டபத்தில் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருகிறார்.
9-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 10-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பங்குனி ரதம் முன் வையாளி கண்டருளுகிறார்.
11-ந்தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்சியான பங்குனி தேரோட்டம் வரும் 12-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு(தேருக்கு) வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 13-ந்தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் சிவராம்குமார் , கோவில்உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!