Skip to content

வீடு ஜப்தி: ராம்குமாருக்கு என்னால் உதவ முடியாது-கோர்ட்டில் பிரபு தகவல்

  • by Authour

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும்(ராம்குமாரின் மகன்), நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் `ஜகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.

இந்த கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்த ஏதுவாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தர் கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `இந்த விவகாரத்தில் மூன்றாம் நபரான தனது இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அதனை நீக்க வேண்டுமெனவும்’ வாதிட்டார்.

தனது சகோதரர் ராம்குமார் பெற்ற மூன்று கோடி ரூபாய் கடனுக்காக தனக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தனது வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, `ராம்குமார் உங்களுடைய சகோதரர் தானே ? ஒன்றாக தானே வாழ்ந்து வருகிறீர்கள்? அந்த கடனை தற்போது நீங்கள் செலுத்திவிட்டு பின்னர் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாமே?’ என யோசனை தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரபு தரப்பு வழக்கறிஞர், `இது போன்று அவருக்கு உதவ முடியாது . அவர் நிறைய பேரிடம்  கடன் வாங்கி இருக்கிறார் என்றார்.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் 8ம்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

error: Content is protected !!