Skip to content

விடுதி மாணவர்களிடம் பாலியல் சேட்டை: திருச்சி பாதிரியார் உட்பட 2 பேர் போக்சோவில் கைது..

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் தூய சவேரியார் மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். விடுதியின் இயக்குனராக கும்பகோணம், அய்யவாடி பகுதியை சேர்ந்த குழந்தைநாதன் என்ற பாதிரியார் பணியாற்றி வருகிறார். இவரும் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய சுந்தர்ராஜ் என்பவரும் நண்பர்கள் ஆவர்.

சுந்தர்ராஜ் திருச்சியில் உள்ள பிரபல கிருத்துவ கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வருகிறார். மேலும் பாதிரியார் ஆக வேண்டும் என இறையியல் கல்லூரியில்  படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தைநாதனை சந்திக்க விடுதிக்கு வரும் சுந்தர்ராஜ் அவ்வப்போது விடுதியில் தங்குவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

அவ்வாறு விடுதியில் தங்கும் நாட்களில் விடுதி மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால் பொது தேர்வு எழுத முடியாமல் செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாணவர்கள் விடுதி இயக்குனர் குழந்தைநாதனிடம்  புகார் தெரிவித்துள்ளனர். அப்போது இதெல்லாம் சகஜம் நீ போய் வேலையை பாரு என்று கூறியதுடன் நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார்.

இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலகத்திற்கு  புகார் செய்யப்பட்டது. அந்த  புகாரின் பேரில் குழந்தைகள் நல  அலுவலர்கள் விடுதிக்கு நேரில் சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் சுந்தர்ராஜ் 7 மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும், விடுதி இயக்குனர் குழந்தைநாதன் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததும்   உறுதியானது.

இதனைத்தொடர்ந்து குழந்தைகள் நல அலுவலர் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சுந்தர்ராஜ், குழந்தைநாதன் இருவர் மீதும்  போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

error: Content is protected !!