ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. . கடந்த 4-ந் தேதி வரை 5 நாட்களில் 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்கள். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனு தாக்கல் கிடையாது. இந்தநிலையில் 6-வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளராக பவானி அருகே உள்ள ஓடத்துறையை சேர்ந்த சீதாலட்சுமி (47), அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கட்சி சார்பில் ஈரோடு 46 புதூரை சேர்ந்த சுந்தராஜன் (32), கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி சார்பில் கே.பி.எம்.ராஜா (45), அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் ஈரோடு காசிபாளையத்தை சேர்ந்த பிரேம்நாத் (41), இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்) சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்த மணி (65) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மேலும் அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சார்பில் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த பேராயர் காட்பிரே வாஷிங்டன் நோபுள் (52) ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். இதேபோல் சுயேச்சையாக 7 பேர் வேட்பு மனுக்களை வழங்கினார்கள்.
எனவே நேற்று மட்டும் ஒரே நாளில் 13 பேர் வேட்பு மனுக்களை வழங்கினார்கள். இதுவரை மொத்தம் 59 பேர் மனு தாக்கல் செய்து உள்ளார்கள். இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். இந்நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு இரட்டை இலை வழங்குவதற்கான படிவத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட்டிருந்தார். இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (புதன்கிழமை) நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும். எனவே அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.