சென்னையில் நேற்று காலை 4 மணி முதல் 6 மணிக்குள் 6 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இதனால் சென்னை நகரமே பரபரப்புக்குள்ளானது. தமிழ்நாட்டில் ஏதாவது நடக்காதா, டிவில் பேட்டி கொடுக்கமாட்டோமா என ஏங்கி கிடந்த பல அரசியல் தலைவர்கள் வழக்கம் போல சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டு என பேட்டி கொடுக்க, அதற்காகவே தவம் இருந்த தொலைக்காட்சிகளும், அதனை ஒளிபரப்பி அரசுக்கு எதிராக எதையாவது செய்ய வேண்டும் என்ற தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தனர்.
ஆனால் சென்னை மாநகர போலீசார் காட்டிய அதிரடியால் இந்த அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் ஒப்பாரி 2 மணிநேரம் கூட நீடிக்கவில்லை. அதற்குள் கொள்ளையர்கள் கூண்டோடு பிடிக்கப்பட்டார்கள்.
செயின் பறிப்பு கொள்ளையர்கள் எப்படி பிடிக்கப்பட்டார்கள் என்பது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளது. நேற்று 6 இடங்களில் செயின்பறிப்பு சம்பவம் நடந்ததும், தனிப்படை அமைத்து துப்புதுலக்க ஆரம்பித்தோம். 100 இடங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்ததில் 2 பேர் மட்டுமே பைக்கில் வந்து இந்த செயின்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
கொள்ளையர்கள் மாநகரை விட்டு எங்கும் வெளியேறிவிடாமல் எல்லையை உஷார்படுத்தப்பட்டது. அவர்களின் அடையாளம், பைக் விவரங்கள் அனைத்து இடங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தில் தப்பி செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதினோம். பைக்கின் கடைசி பயணம் விமான நிலையத்தை நோக்கி நகர்ந்ததை உறுதி செய்தபின் ஒரு தனிப்படை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் விமானத்தில் டிக்கெட் எடுத்து யாரும் பயணிக்கிறார்களா, இந்த அங்க அடையாளம் உள்ளவர்கள் என கேட்டபோது சந்தேகத்தின் பேரில் ஒருவர் ஐதராபாத் செல்லும் விமானத்தில் இருப்பதாக தெரிவித்தனர்.
அந்த விமானத்தை நிறுத்திவைக்கும்படி கூறினோம். அதற்குள் விமானத்திற்குள் சென்று அந்த நபரை பிடித்து வந்து விட்டோம். அவர் தன்னை வேறுபடுத்திக்காட்டுவதற்காக சட்டையை மாற்றி இருந்தார். ஆனால் ஷூ வை மாற்றவில்லை. எனவே ஷூவை வைத்து அவரை பிடித்துக் கொண்டோம்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் மொத்தம் 3 பேர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரும் மகாராஷ்டிரா மாநிலம் இரானி
கொள்ளையர்கள். இது பெரிய கொள்ளைக் கும்பல். இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
பைக்கில் சென்று கொள்ளையடித்து ஜாபர், மற்றும் ஒருவர் நேற்று அதிகாலை தான் விமானம் மூலம் சென்னை வந்தனர். அதற்கு சில தினங்களுக்கு முன்னரே ஒரு கொள்ளையன் பைக்குடன் சென்னை வந்து ஏரியாக்களை நோட்டம் விட்டு இடங்களை தேர்வு செய்து விட்டான்.
நேற்று வந்த ஜாபர் உள்ளிட்ட இருவரையும் விமான நிலையத்தில் பைக்குடன் வந்து வரவேற்ற 3வது கொள்ளையன், பைக்கை ஜாபர் உள்ளிட்ட இருவரிடமும் கொடுத்து விட்டு விமான நிலைய பகுதியில் இருந்து கொண்டான்.
அவன் கொடு்த தகவலின்பேரில் இருவரும் பைக்கில் சென்று 6 இடத்தில் நகைகளை பறித்துகொண்டு மீண்டும் விமான நிலையம் வந்தனர். இவர்களின் ஒருவன் ஐதராபாத் விமானத்தில் செல்ல ஏறிவிட்டான். இன்னொருவன் ரயில்மூலம் சென்று கொண்டு இருந்தான். அ வனிடம் நகைகள் இருந்தன.
விமானந்தில் இருந்து பிடிபட்ட ஜாபரிடம் விசாரித்தபோது அவன் உண்மையை கூறிவிட்டான். அவன் கூறிய தகவலை வைத்து பைக்கை வைத்திருந்தவனை பிடிக்க சென்றபோது அவர் துப்பாக்கியை எடுத்து சுட்டதில் போலீஸ் வாகனத்தின் மீது குண்டு பாய்ந்தது. போலீசார் சுதாரித்து தப்பிவிட்டனர்.
ரயிலில் தப்பிச்சென்றவனையும் ஓங்கோல் அருகே போலீசார் மடக்கினர். ரயிலை நிறுத்திஅவனை கை து செய்தனர். 6 பேரிடமும் 26 பவுன் நகைகள் பறித்து உள்ளனர். அந்த நகை மீட்கப்பட்டன.
இந்த கொள்ளையில் உள்ளூர் கொள்ளையர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை. இந்த கொள்ளை தொடர்பாக மேலும் விசாரணை நடத்த தனிப்படையினர் மும்பை செல்ல இருக்கிறார்கள்.
இவர்களில் ஜாபர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்டர் செய்யப்பட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.