2004 டிசம்பர் மாதம் 26ம் தேதி காலை இந்தோனேசியா கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவில் பதிவானது. இது மிககொடூரமான நிலநடுக்கம். இதனால் இந்தியா, இலங்கை, உள்பட பல நாடுகளில் சுனாமி தாக்கியது. இதில் 1லட்சத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.
அதன் பிறகு பல்வேறு நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் அந்த அளவு பெரிய பாதிப்பு இதுவரை ஏற்பட்டதில்லை. இந்தோனேசியாவிலும் கடந்த ஆண்டு பல முறை சிறு சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில்நேற்று அதிகாலை துருக்கி மற்றும்சிரியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மட்டும் துருக்கியில் 3 முறை பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தவிர சிறு சிறு அதிர்வுகளும் பலமுறை ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதில் ஏராளமானவர்கள் பலியானார்கள். இதுவரை 4500க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று காலையில், 2வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது. இதனால்மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டது. துருக்கியின் 10 மாநிலங்கள் நிலநடுக்கத்தால் உருக்குலைந்தன. பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. மீட்பு பணிகளில் ஈடுபட இந்திய பேரிடர் மீட்புக்குழு துருக்கி விரைந்து உள்ளது. மோப்பநாய்கள் மற்றும் உபகரணங்கள்உள்பட நிவாரண பணிக்கான அனைத்து தளவாடங்களுடன் அவர்கள் இன்று காலை இஸ்தான்புல் போய் சேர்ந்தனர். அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். இதுபோல 20க்கும் மேற்பட்ட நாடுகள் மீட்பு பணியில் உதவ முன்வந்து துருக்கிக்கு படைகளையும், மருந்துகள் மற்றும் மருத்துவர்களையும் அனுப்பி உள்ளது.
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறும்போது, இயற்கை ஒத்துழைத்தால் மீட்பு பணிகளை முடிக்க இன்னும் 2வாரம் ஆகலாம். பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என்றும் துருக்கி மீண்டும் உருவாக்கப்பட பல வருடங்கள் ஆகலாம் என்றும் தெரிவித்தனர்.