இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்(59) சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக தங்கி இருந்து பல ஆய்வுகள் மேற்கொண்டார். அவரது ஆய்வு பணிகள் நிறைவு செய்யப்பட்டதை தொடர்ந்து சுனிதா மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்து வந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலம் இந்திய நேரப்படி அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர். விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது தாய் போனி ஸலோகார் ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்தவர். இந்த தம்பதியின் 3- வது மகளாக 1965ல் சுனிதா பிறந்தார்.
அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்த சுனிதா வில்லியம்ஸ், புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதா, 1998-ம் ஆண்டு நாசாவில் இணைந்தார். விண்வெளிக்கு சென்று பல பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்த சுனிதா வில்லியம்ஸ், அதிக நேரம் விண்நடை மேற்கொண்டு சாதனை புரிந்தார்.
தற்போது சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ள நிலையில், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான ஜுலாசன் கிராமத்தில் கொண்டாட்டம் களை கட்டியது. முன்னதாக சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்கு முன்பு விண்வெளிக்கு சென்றபோது, அவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வேண்டி ஜுலாசன் கிராம மக்கள் ‘அகண்ட் ஜியோத்என்று அழைக்கப்படும் தீபத்தை ஏற்றி வைத்து அதை அணையாமல் பாதுகாத்து வருகின்றனர்.
தற்போது சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியுள்ள நிலையில், அவரது சாதனைகளை கவுரவிக்கும் விதமாக ஒரு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பேரணி முடிந்தவுடன் கோவிலில் வைத்து ‘அகண்ட் ஜியோத்’ தீபம் அணைக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் விரைவில் சுனிதா வில்லியம்சை இந்தியாவிற்கு அழைக்க உள்ளதாகவும் ஜுலாசன் கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர். சுனிதா வில்லியம்சின் உறவினர் நவீன் பாண்டியா இதனை தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு சுனிதா வில்லியம்ஸ் 3 முறை இந்தியாவிற்கு வந்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு சார்பில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.