Skip to content

மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு: எதிர்க்கட்சிகள் அமளி

  • by Authour

மக்களவையில் பிரதமர் மோடி  இன்று  உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கோடிக்கணக்கான மக்களின் வருகையால் மகா கும்ப மேளா சிறப்படைந்தது. மகா கும்பமேளாவை வெற்றியடைய செய்த பக்தர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. மகா கும்பமேளாவின் வெற்றியில் அனைவருடைய பங்கும் அடங்கி இருக்கிறது.

அரசு, சமுதாயம், மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவருடைய பங்கும் உள்ளது. பகத்சிங், காந்தியைபோல் நாட்டின் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக மகா கும்பமேளா இருந்தது. கங்கா தேவியை பூமிக்கு கொண்டு வருவதற்கு பகிரத மன்னன் முயற்சி மேற்கொண்டது நம் எல்லோருக்கும் நன்கு தெரியும். அதே போன்று ஒரு பகிரத முயற்சியை இந்த மகா கும்பமேளாவில் நாம் பார்த்தோம். மிகப்பெரிய இலக்குகளை நோக்கிய தேசிய நலனின் அடையாளமாக மகா கும்பமேளா விளங்கியது. கடந்த ஆண்டுதான் அயோத்தியாவில் ஆயிரம் ஆண்டு கால காத்திருப்பிற்கு பின்னர் ராமரின் பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது.

அடுத்த தலைமுறைக்கு இந்த கும்பமேளா ஒரு பெரும் உதாரணமாக திகழும். சுமார் ஒன்றரை மாத காலமாக மகா கும்பமேளாவின் உற்சவம் நடைபெற்றது. மொரிசியஸ் சென்ற போது திரிவேணி சங்கமத்தில் சேகரித்த புனித கலச நீரை கொண்டு சென்றேன். புனித நீரை மொரிசியஸ் நாட்டில் உள்ள கங்கா தலால் ஆற்றில் அர்ப்பணித்தேன் என்று கூறினார்.

மகா கும்பமேளா தொடர்பாக பிரதமர் மோடி பேசிய நிலையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!