தமிழக சட்டமன்ற சபாநாயகர்அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 154 வாக்குகளும் கிடைத்தன. தேர்தலை நடத்திய துணை சபாநாயகர் பிச்சாண்டி இதனை அறிவித்தார். அதன்பிறகு சபாநாயகர் அப்பாவு தனது ஆசனத்திற்கு வந்து அமர்ந்து சபை நடவடிக்ககைளை தொடர்ந்து நடத்தினார்.
தீர்மானம் தோல்வி அடைந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கூறியதாவது:
தீர்மானம் வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல, ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக தீர்மானம் கொண்டு வந்தோம். தீர்மானம் கொண்டு வந்த பிறகும், எதிர்க்கட்சித்தலைவர் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. இது மக்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு முன் தமிழக சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால் மீது 2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டு இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனையடுத்து சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை என கூறி திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதனையடுத்து சட்டசபையில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் முடிவில் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது குரல் வாக்கெடுப்பில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. துணை சபாநாயகராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் இந்த விவாதத்தையும் வாக்கெடுப்பையும் நடத்தினார். 8 வருடத்திற்கு பின்னர் மீண்டும் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.