தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சன்னங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த குமார்,40. விவசாயத் தொழிலாளி. இவருக்கு அனிதா,36, என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடைபெற்று மூன்று மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், குமார் வீட்டிற்கு முறையாக பணம் தருவது இல்லையாம். இதனால், குமாருக்கும், அனிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால், அனிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோபித்துக் கொண்டு, குப்பங்குளத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்குச் சென்று விட்டார்.
இதையடுத்து குமார் பலமுறை அழைத்தும், அனிதா வீட்டிற்கு வர மறுத்த ஆத்திரமடைந்து நேற்று மனைவியை தேடி குப்பங்குளம் சென்றார். அப்போது, அனிதா வயல்வெளியில், விறகு வெட்டிக் கொண்டு இருந்ததை பார்த்த குமார், அனிதாவை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அங்கு, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, குமார் தனது மனைவி அனிதா வைத்திருந்த விறகு வெட்டும் அருவாளை பிடுங்கி, அவரது கை, கால் தலை என 30 இடங்களில், வெட்டியதில் அனிதா அலறினார். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு, காயமடைந்த அனிதாவை மீட்டு, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் அனிதா, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.