அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக மூத்த உறுப்பினர் செங்கோட்டையனுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு கடந்த ஒருமாதமாக வெளியே தெரியும் அளவுக்கு முற்றி வருகிறது. சட்டமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி 2 முறை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
அத்துடன் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய செங்கோட்டையன், சில வேடிக்கை மனிதர்களைப்போல நான் வீழ்ந்து விடமாட்டேன் என்ற பாரதியின் வரிகளையும் சுட்டிக்காட்டி பேசினார். இந்த பேச்சு எடப்பாடிக்கு நேரடியாக விடுக்கப்பட்ட சபாலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்இன்றும் எடப்பாடி கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்ததால், அவரை சமாதானப்படுத்த எடப்பாடி தூதுக்குழுவை அனுப்பியதாக தெரிகிறது. அதன்படி சட்டமன்ற கூட்டத்திலேயே அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செங்கோட்டையனுடன் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார்.
பின்னர் சட்டமன்ற வளாகத்திலேயே ஒரு அறையில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, முனுசாமி ஆகியோர் செங்கோட்டையனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். எடப்பாடி உத்தரவின்படி இவர்கள் செங்கோட்டையனை சந்தித்து சமரசம் பேசியதாக கூறப்படுகிறது.