மாநகராட்சி துாய்மை பணியாளரிடம் வழிப்பறி
சேலம் மாவட்டம், சூரமங்கலம், செலந்தன்பட்டி குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (40), சேலம் மாநகராட்சியில் துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று திருச்சியில் உள்ள தன் மகள் வீட்டிற்கு வந்தார். பஸ்சில் இருந்து இறங்கி கிராப்பட்டி ரெயில்வே பாலம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மர்ம நபர் இவரை கத்தியால் தாக்கிவிட்டு இவரிடம் இருந்த ரூ 1000 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார். இது குறித்து புகாரின் பேரில் எ.புதுார் போலீசார் வழக்கு பதிந்து திருச்சி, கம்பரசம்பேட்டை, பெரியார் நகரைச் சேர்ந்த காக்கா சூரியா (19) மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
லால்குடி, மாந்துரையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (54), அரசு பஸ் கண்டக்டர். நேற்று பஸ்சில் ஓட்டுனர் குமாருடன் காந்தி, மார்க்கெட் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியை மறித்து ரிக்க்ஷா ஓட்டுனர் சென்றுகொண்டிருந்தார். ஒலி எழுப்பி வழிவிடுமாரு கேட்டதால் அந்த ரிக்ஷா ஓட்டுனர் ஆத்திரத்தில் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கியுள்ளார். காயமடைந்த குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து இ.பி.ரோடு, சத்தியமூர்த்த நகரைச் சேர்ந்த ரகுராமன் (29) என்ற வாலிபரை கைது செய்தனர்.
தொழிலாளி மாயம்.
திருச்சி, காந்தி மார்க்கெட், மணிமண்டப சாலையைச் சேர்ந்தவர் அசாருதீன் (53), கூலி தொழிலாளி.
இவரது மனைவி அசியா பீவி (44). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று வீட்டில் இருந்து சென்ற அசாருதீன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூச்சுத்திணறல்.. ஒருவர் சாவு.
திருச்சி, தெற்கு தாராநல்லுார், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன் (47). நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அய்யப்பன் நேற்று உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் விசாரிக்கின்றனர்
இருசக்கர வாகன மோதி மோதி முதியவர் பலி.
சோமரசம்பேட்டை, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமன் (85), இவர் கடந்த 12 ந்தேதி திருச்சி திண்டுக்கல் சாலை இளங்காட்டு மாரியம்மன் கோயில் தெரு அருகே நடந்து சென்றபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த மொப்பட் இவர் மீது மோதியது. இந்த இருசக்கர வாகனத்தை முசிறி, பெரியார் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (62) ஓட்டினார். இந்த விபத்தில் ராமன் தலையில் பலந்த காயமடைந்தார், ராஜேந்திரன் நெஞ்சு மற்றும் காலில் காயமடைந்தார். இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராமன் நேற்று உயிரிழந்தார். இது குறித்து இவரது மனைவி பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் ராஜேந்திரன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். விபத்து ஏற்படுத்திய மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
காரை தராமல் ஏமாற்றிய வாலிபர் கைது.
திருச்சி, உறையூர், காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராம்பிரசாத் (28), வெக்காளியம்மன் கோயில் அருகே செல்போன் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார். 2023ம் ஆண்டு இவர் காரை இவரது நண்பனான நெசவாலர் காலனியைச் சேர்ந்த வசந்தகுமார் (34) பெற்றுக்கொண்டார். ஆனால் பல ஆண்டுகளாகியும் காரை திரும்ப தரவில்லை. இது குறித்து ராம்பிரசாத் அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து வசந்தகுமாரை கைது செய்தனர்.
புகையிலை விற்ற 2 பேர் கைது
திருச்சி, சூப்பர் பஜார் அருகே டீ கடையில் அரசால் தடைவிதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று புகையிலை விற்ற சிங்காரத்தோப்பைச் சேர்ந்த சையது அலி (42) என்பவரை கைது செய்தனர். ரூ.3 ஆயிரத்து 280 மதிப்புள்ள ஆயிரத்து 460 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்றவர் கைது.
ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலை அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக திருவரங்கம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சுபாஸ் சந்திர போஸை (28) கைது செய்தனர். 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
அரியமங்கலம், பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்பொழுது சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்தவர்களை விசாரித்தனர். இதில் அவர்கள் அரியமங்கலம், காமராஜ் நகரைச் சேர்ந்த ரவுடியான பைசூதீன் (24) மற்றும் வடக்கு காட்டூர், அன்னதாசன் தெருவைச் சேர்ந்த முத்துமணி (25) என்பதும், ரூபாய் ஆயிரத்து 500 மதிப்புள்ள 100 டைடால் போதை மாத்திரை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. மாத்திரையை பறிமுதல் செய்து 2 பேரையும் அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.