மேற்குவங்க மாநிலம் பால்பூர் பகுதியைச் சேர்ந்த ஸ்வப்பன் மன்னா(61) என்பவர் மேற்கு வங்க மாநில தொழிலாளிகளோடு சென்னை வானகரம் SV CBSE பள்ளி பின்புறம் தற்காலிக டெண்ட் அமைத்து தாரா கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் துப்பரவு தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் 10 நாட்களுக்கு முன்பாக இவர் தங்கி இருந்த டென்ட் பகுதிக்கு அருகே தெருநாய் ஒன்று இவரை கடித்துள்ளது. அன்றே மருத்துவமனை சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 13ம் தேதி மாலை ஸ்வப்பன் மன்னா, தன்னால் மூச்சு விட இயலவில்லை என தனது உறவினரான ரஞ்சித் கோயன்(31) என்பவருக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் கோயன், குடிசை பகுதிக்கு வந்து பார்த்தபோது சுயநினைவின்றி ஸ்வப்பன் மன்னா கிடந்ததை கண்டு வானகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
போலீசார் உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்னை வந்ததும் உடற்கூராய்வு செய்யப்பட்டு உடல் ஒப்படைக்கப்படும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வானகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இவரை கடித்த தெரு நாய் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது இவர் நாய் கடித்துதான் உயிரிழந்தாரா..! அல்லது வேற ஏதேனும் காரணம் உள்ளதா..! என்பது பிரேதபரிசோதனை ஆய்வு வந்த பிறகு தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
