அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மேல மைக்கேல் பட்டி கிராமத்தில் புனித அந்தோனியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை கோட்டாட்சியர் ஷீஜா கொடியசைத்து துவக்கி வைத்தார். தஞ்சாவூர், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகளுக்கும், மாடுப்பிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு களத்தில் அனுமதிக்கப்பட்டனர். வாடி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடு பிடி வீரர்கள்
துணிச்சலாக திமிலை பிடித்து அடக்கினர். இதில் காளையர்களுக்கு பிடிப்படாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய காளையர்களுக்கும் விழா குழுவின் சார்பில் கட்டில், பீரோ , சைக்கிள், சேர், டேபிள், குவளை, குடம், தங்கநாணயம், டிவி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
போட்டியில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. போட்டியின் போது அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.