Skip to content

தஞ்சை…. வாலிபர் கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், கடந்த 2009ம் ஆண்டு, பணத்தகராறில், இளைஞர் கொலைச் செய்யப்பட்ட வழக்கில், 16 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் என்கிற கேன்டீன் செந்தில்(29). இவர் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். கேன்டீன் ஒன்றையும் நடத்தி வந்தார். இந்நிலையில், தாராசுரம், அனுமார்கோவில் தெருவை சேர்ந்த லெட்சுமணனுக்கும், செந்தில்நாதனுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக முன்விரேதம் இருந்து வந்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு நவ.13ம் தேதி, லெட்சுமணன், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களான தாராசுரம் பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் ராமர், முனியப்பன் மகன் திருநாவுக்கரசு, அர்ச்சுணன் மகன் விக்னேஷ், கருப்பு மகன் இளங்கோவன், கண்ணாடிசாமி மகன் மூர்த்தி, மதுரை அருகே செல்லுரை சேர்ந்த அய்யர் மகன் பாண்டி, மனோகரன் மகன் கார்த்திக், கொரநாட்டுகருப்பூரை சேர்ந்த போஸ் மகன் கார்த்திக் ஆகிய ஒன்பது பேரும், தாராசுரம் காய்கறி மார்கெட் முன்பு செந்தில்நாதன் நின்றுக்கொண்டு இருந்த போது, அவரிடம் தகராறு செய்தனர். தொடர்ந்து செந்தில்நாதனை, லட்சுமணன் உட்பட அந்த கும்பர் வெட்டிக்கொலை செய்தனர்.

இது குறித்து கும்பகோணம் தாலுக்கா போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், லெட்சுமணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மேலும், ராமர் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை நீதிபதி ராதிகா விசாரித்து கொலை வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு (41), விக்னேஷ் (40),  இளங்கோவன்(41), பாண்டி(40) ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், மதுரையை சேர்ந்த மனேகாரன் மகன் கார்த்திக், கொரநாட்டுகருப்பூரை சேர்ந்த போஸ் மகன் கார்த்திக், தாராசுரம் பகுதியை மூர்த்தி ஆகிய மூவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

error: Content is protected !!