சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இல்லத்திற்கு y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று நீலாங்கரையில் உள்ள துணை ராணுவ அதிகாரிகள், ஒன்றிய உளவு பிரிவு, தமிழ்நாடு காவல்துறை சார்பாக நீலாங்கரை உதவி ஆணையர் பரத் தலைமையிலான போலீசார் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பொதுச் செயலாளர் N.ஆனந்த் உள்ளிட்டோர் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் ஆலோசனை நடத்தினர்.
விஜய்யுடன் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ‘ஒய்’, ‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்குகிறது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் விஜய்யின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
விஜய்க்கு பாதுகாப்பு வழங்கும் வீரர்களில் மூன்று பேர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மெஷின் கன்னுடன் விஜய் வீட்டில் பாதுகாப்பில் இருப்பார்கள். மற்ற எட்டு பேர் 9 எம்எம் பிஸ்டல், ஸ்டன் கன் உடன் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவருக்கு தனிப்பட்ட முறையில் அவரால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தின் பவுன்சர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், தவெக தலைவர் விஜய், சுற்றுப்பயணம், மாநாடு போன்றவற்றை திட்டமிட்டிருக்கும் நிலையில், கமாண்டோக்கள் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கவுள்ளனர். கடந்த ஆண்டு விஜய் தரப்பில் பாதுகாப்பு கேட்டு மத்திய அரசிடம் கடிதம் அளிக்கப்பட்டதாகவும் அதன் பேரிலேயே பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.