தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் கடைக்கோடி குக்கிராமங்களையும் சென்றடையும் வகையில் தரமான சாலை வசதிகளை உருவாக்கிடும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ் 2025-26 ஆம் ஆண்டு 6,100 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமச் சாலைகள் 2,200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். மேலும், கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளின் தொடர் பராமரிப்பிற்கென ஒவ்வொரு ஆண்டும் மாநில நிதிக் குழு மானியத்திலிருந்து உரிய நிதி ஒதுக்கிட முடிவு செய்து.. 2025-26 ஆம் ஆண்டிற்கு 120 கோடி ரூபாய் விடுவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் கடந்த 2001 ஆம் ஆண்டிற்கு முன்னர் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் ஊரகப் பகுதிகளில் வாழும் விளிம்புநிலை மக்களுக்காகக் கட்டப்பட்டு, தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக. புதிய வீடுகளை கட்டித் தர இந்த அரசு முடிவு செய்துள்ளது.. 2025-26 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் புதிய வீடுகள் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.
தமிழ்நாட்டின் அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு பெற்றிடும் வகையில், பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும் நோக்கத்தோடு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-IIன் கீழ், 2025-26 ஆம் ஆண்டில் 2,329 கிராம ஊராட்சிகளில் 1,087 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தினைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில் 40.87 கோடி மனிதசக்தி நாட்கள், 13,392 கோடி ரூபாய் செலவினத்தில் எய்தப்பட்டுள்ளது. ஆனால், 2024-25 ஆம் ஆண்டில் 27-11-2024 முதல் 11-03-2025 வரை வேலைசெய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 2,839 கோடி ரூபாய் ஊதியம் மற்றும் 957 கோடி ரூபாய் பொருட்கூறுக்கான நிதி என மொத்தம் 3,796 கோடி ரூபாயை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
2025-26-ஆம் ஆண்டில் பல்வேறு திட்ட நிதிகளைத் திரட்டி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 6,483 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 3,750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ், குறிப்பாக 570 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 486 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியிலும், கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகரத்தில் வாகனப் போக்குவரத்து பன்மடங்காக அதிகரித்துள்ளதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டப்படும்.
இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 29,465 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி நிருவாகம்
தமிழ்நாட்டில் நகர்ப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, பொது சுகாதாரம், இணைப்புச் சாலைகள், தெருவிளக்குகள், நவீன மின் மயானம், நூலகங்கள் மற்றும் கணினியுடன் கூடிய அறிவுசார் மையங்கள் உள்ளிட்ட சமுதாய அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 4,132 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக, வரும் நிதியாண்டில் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆற்றங்கரைகளில் அமைந்துள்ள மாநகராட்சிப் பகுதிகளிலிருந்து உருவாகும் கழிவுநீர், ஆற்றில் நேரடியாகக் கலப்பதைத் தடுக்கும் பொருட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நடைபாதைகள், தெருவிளக்குகள், நவீன ஓய்வறைகள், குழந்தைகள் விளையாட்டுப் பூங்காக்கள் மற்றும் இதர நவீன வசதிகளுடன் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் திருச்சி, மதுரை, ஈரோடு.. கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் மொத்தம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.
நகர்ப்புரங்களில் வசிக்கும் மக்களுக்குத் தூய்மையான மற்றும் பசுமையான வாழிடச் சூழலை உருவாக்கும் பொருட்டு, அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. முப்பது மாத காலத்திற்குள் பணி நிறைவடையக் கூடிய இத்திட்டத்தின் முதற்கட்டமாக, சைதாப்பேட்டை முதல் திரு.வி.க.பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்படும். பருவநிலை மாற்றத்திலிருந்து மீட்கும் தன்மையுடைய ஏழு மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) சென்னை பெருநகரப் பகுதியில் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஐந்து நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மூன்று கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஒவ்வொரு குடிநீர் நிலையத்தில் இருந்தும் குடிநீர் விநியோகம் நகரின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பிரதானக் குழாய்கள் மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தேவைப்படும்போது
ஒரு பகுதியின் உபரி நீரை, பற்றாக்குறை உள்ள மற்றொரு பகுதிக்கு மாற்ற இயலவில்லை. எனவே, முதன்மைச் சுற்றுக் குழாய் திட்டம் எனும் புதிய திட்டத்தின் மூலம் அனைத்து நீர்ப்பகிர்மான நிலையங்களையும் இணைத்து, சென்னை மாநகரில் உள்ள அனைத்து குடிநீர் விநியோக நிலையங்களுக்கும் சமமான அளவில் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.. சமச்சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்திடும் இத்திட்டம் 2,423 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த 3 ஆண்டு காலத்திற்குள் நிறைவேற்றப்படும்.
சென்னைப் பெருநகர மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் அளவிலும், கோவை மாநகராட்சியில் 120 கோடி ரூபாய் அளவிலும், திருச்சி மாநகராட்சியில் 100 கோடி ரூபாய் அளவிலும் மற்றும் திருப்பூர் மாநகராட்சியில் 100 கோடி ரூபாய் அளவிலும் நகர்ப்புர நிதிப் பத்திரங்கள் வாயிலாக.. கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதன் மூலம் நகர்ப்புர உட்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றிடத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் உள்ள. நாற்பது ஆண்டுகளுக்கு மேலான கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைப் புதுப்பிக்க எழுந்துள்ளது. வேண்டிய தேவை தற்போது செயல்திறன் குறைந்த பழைய மின் இறைப்பான்கள் மற்றும் குழாய்கள் ஆகியவற்றை மாற்றிடவும், தேவைப்படும் இடங்களில் நீர் ஆதாரங்களைப் புதுப்பித்து கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை மேம்படுத்தவும், இந்த ஆண்டு 675 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு, இத்திட்டப் பகுதிகளில் குடிநீர் வழங்கல் சீராக நடைபெறுவது உறுதி செய்யப்படும்.
மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சிகள், தரங்கம்பாடி, மணல்மேடு மற்றும் குத்தாலம் பேரூராட்சிகள் மற்றும் 1,042 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 2,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11.22 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி மற்றும் 493 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 864 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.64 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 639 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 370 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.3 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 890 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4.91 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 374 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 92,000 மக்கள் பயன்பெறும் வகையில் 214 ஊரக மேற்கொள்ளப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 138 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 76,000 மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
41. இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 26,678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமச்சீர் வளர்ச்சி
சென்னை மாநகரத்தின் சமச்சீர் வளர்ச்சியை உறுதிசெய்திட வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பேருந்து நிலையம் அமைத்தல், குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்துதல், குடிநீர்ப் பணிகள், கல்வி மற்றும் மருத்துவ உட்கட்டமைப்புப் பணிகள், ஏரிகள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப் பணிகள், கடற்கரை மேம்படுத்துதல், மீன் சந்தை அமைத்தல், உடற்பயிற்சி நிலையம், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுக் கட்டமைப்புப் பணிகள், மின் மயானங்கள் அமைத்தல், துணை மின் நிலையம் மற்றும் மின் மாற்றிகள் தரம் உயர்த்தும் பணிகள், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி அமைத்தல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குதல் போன்ற பணிகள் 6,858 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டிலேயே அதிக நகரமயமாதல் மற்றும் அதனுடன் எழும் சவால்களை சந்தித்து வரும் மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று. அதிலும் குறிப்பாக, சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களை நோக்கி
பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்து வருவதால், உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை வசதிகள், குடிநீர், தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் அகற்றல் போன்ற அடிப்படைத் தேவைகளையும், பேருந்து வசதிகள், கல்வி மற்றும் பொது சுகாதார வசதிகளையும் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் வழங்கிட, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன. எனினும் பெருநகரங்களின் விரிவாக்கம் ஆங்காங்கே நடைபெறுவதைக் காட்டிலும், பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது மிகவும் பொருத்தமானது எனும் நகரமைப்பு வல்லுநர்களின் கருத்தை ஏற்று முதற்கட்டமாக சென்னைக்கு அருகே ஓர் புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்.
தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், நிதி நுட்ப வணிக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள்.. உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக
மாநாட்டுக் கூடங்கள் மட்டுமன்றி, அரசு மற்றும் தனியார் துறையின் மூலம் கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகள் அளிக்கும் நிறுவனங்களும் இந்நகரத்தில் அமைக்கப்படும். சமூகத்தின் உயர் வருவாய் கொண்ட வகுப்பினர், மத்திய தர வகுப்பினர் மற்றும் குறைந்த வருவாய் கொண்ட வகுப்பினர் என அனைவருக்குமான வீட்டு வசதிகள் நிறைந்த பன்னடுக்குக்கு கட்டடங்கள் கொண்டதாக இந்நகரம் அமையும். விரிவான சாலைகள், தகவல் தொழில்நுட்ப மற்றும் பசுமை மின்சக்தி அமைப்புகள், பகிர்ந்த பணியிடச் சேவை மற்றும் நகர்ப்புரச் சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற பொழுது போக்குச் சேவை கட்டமைப்பு வசதிகளும் இந்நகரில் இடம்பெறும். சென்னை மாநகரை இப்புதிய நகரத்துடன் இணைத்திட உரிய சாலை வசதிகள், விரைவுப் பேருந்துகள், மெட்ரோ ரயில் விரிவாக்கம் வசதிகளுடன் ஆகியவையும் உருவாக்கப்படும். உலகத் தரத்துடன் கூடிய (Global City) உருவாக்கிடுவதற்கான முதற்கட்டப் பணிகளை டிட்கோ நிறுவனம் விரைவில் தொடங்கும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற நாளிலேயே கையெழுத்திட்ட முதல் ஐந்து கோப்புகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் ‘விடியல் பயணம்’ என்ற மகத்தான திட்டமும் ஒன்று. தமிழ்நாட்டு மகளிரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தின் மூலம், பேருந்துப் பயணம் செய்வோர்களில் பெண்களின் சதவீதம் 40 லிருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது..
தினமும், சராசரியாக 50 இலட்சம் மகளிர், பேருந்துகளில் இதுவரை 642 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். மகத்தான இத்திட்டத்தினால் பெண்கள் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் சேமிக்க முடிகிறது என மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்கான மானியத் தொகை 3,600 கோடி ரூபாயை 2025-26 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கியுள்ளது.
மகளிர் நலத் திட்டங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே பதினைந்து இலட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் பயன்பெறும் இல்லத்தரசிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது, அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருப்பது மட்டுமன்றி, அவர்கள் கணிசமாக சேமிக்கவும் வழிவகுக்கிறது. இதுவரை, மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள்
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவியர் உயர்கல்வி பயில்வதை உறுதிசெய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், தற்போது நான்கு லட்சத்து ஆறாயிரம் மாணவியர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பின், உயர்கல்வியில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை சென்ற கல்வியாண்டில் 19 சதவீதம் அதிகரித்து, கூடுதலாக 40,276 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்பதை பெருமையுடன் இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறேன். வரும் நிதியாண்டில் இத்திட்டத்தினைச் செயல்படுத்திட 420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுயஉதவிக் குழு இயக்கத்தில் இதுவரை இணைந்திடாத மகளிர் மற்றும் விளிம்புநிலை வாழ் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு, 10,000 புதிய சுயஉதவிக் குழுக்கள் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும். மேலும், வரும் நிதியாண்டில் சுயஉதவிக் குழுக்களுக்கு 37,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
தொடர்ந்து அமைச்சர் பட்ஜெட் உரை வாசிக்கிறார்.