Skip to content

முதன் முறையாக பொருளாதார ஆய்வறிக்கை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை  நாளை காலை 11 மணிக்கு  தாக்கல்  செய்யப்படுகிறது.  நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு இதனை தாக்கல் செய்கிறார். அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் வருவதால்  பல முக்கிய சலுகைகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு அலுவலர்களுக்கான பல சலுகைகளும் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் மாநில திட்டக்குழுவின் சார்பில்  முதன் முதலாக தயாரிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  வெளியிட்டார். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் மாநில திட்டக்குழு சார்பில் தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுவது இதுவே முதல்முறையாகும்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இடம் பெற்றிருப்பதாவது;

தமிழ்நாடு நாட்டின் பொருளதார வளர்ச்சி 2024 – 2025ம் ஆண்டில் 8 சதவீதத்திற்கு மேல் இருக்கும். ஒரு டிரில்லியன் அமெரிக்க பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட தமிழ்நாடு அரசின் பொருளதார வளர்ச்சி ஆண்டு தோறும் 12 சதவீதம் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். 2023 – 2024 ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 27.22 லட்சம் கோடியாக உள்ளது. இதன்படி பொருளதார வளர்ச்சி 8.23 சதவீதமாக உள்ளது.

மாநிலத்தின் மக்கள் தொகையில் 31.8% உள்ள வடக்கு மண்டலம், GSDP-யில் 36.6% என்ற அதிகபட்ச பங்களிப்பை வழங்குகிறது. 22.8% மக்கள்தொகை கொண்ட மேற்கு மண்டலம் GSDP-யில் 29.6% பங்களிப்பை வழங்குகிறது. 20.5% மக்கள்தொகை பங்கைக் கொண்டுள்ளது தெற்கு மண்டலம் GSDP க்கு 18.8% பங்களிக்கிறது. கிழக்கு மண்டலம், 25.5% மக்கள்தொகையுடன், 15.1% இல் மிகக் குறைந்த GSDP பங்கைக் கொண்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சேவைத்துறை வலுவான மீட்சியைக் கண்டுள்ளது. அதன்படி, 2021-22 மற்றும் 2023-24 க்கு இடையில், ரியல் எஸ்டேட் (9.41%), வர்த்தகம், பழுதுபார்ப்பு, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் (7.98%) மற்றும் போக்குவரத்து மற்றும் சேமிப்பு (7.67%) ஆகியவற்றின் விரைவான விரிவாக்கத்தால் இந்தத்துறை 7.97% வளர்ச்சியடைந்துள்ளது.

2021-22 மற்றும் 2023-24 க்கு இடையில் உற்பத்தித் துறை 8.33% வளர்ச்சி அடைந்துள்ளது கட்டுமானத் துறை 9.03% வளர்ச்சி அடைந்துள்ளது. போக்குவரத்து உபகரணங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட பல துணைத் துறைகள் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.

இந்தியாவில் மிக உயர்ந்த தனிநபர் வருமானங்களில் ஒன்றாக  தமிழ்நாடு இருந்து வருகிறது. இது வலுவான பொருளாதார அடித்தளத்தையும் பன்முகப்படுத்தப்பட்ட தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளையும் பிரதிபலிக்கிறது. 2023-24ம் ஆண்டில், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.3.15 லட்சமாக இருந்தது, இதனால் நாட்டின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இடம்பிடித்தது. மாநிலத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட சற்று அதிகமாக உள்ளது.

மற்ற முக்கிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம், கொள்முதல், சக்தி சமநிலை (PPP)க்கு சரிசெய்யப்படும்போது, அர்ஜென்டினா மற்றும் துருக்கி போன்ற நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது. இருப்பினும், மாவட்டங்கள் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் தனிநபர் வருமானத்தில் முன்னணியில் உள்ளன, அதே நேரத்தில் சில தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் மாநில சராசரியை விட குறைவாகவே உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள்:

தமிழ்நாட்டில் தனிநபர் வருமான அளவு, தேசிய அளவில் இருப்பதை விட1.64 மடங்கு அதிகம்.

தனிநபர் சராசரி வருமானம் – 2022-23-ல் தேசிய அளவில் ரூ.1.69 லட்சம், தமிழ்நாட்டில் ரூ.2.78 லட்சம்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ஆக நீடிக்கும்.

தனிநபர் வருமானத்தைப் பொறுத்த அளவில், 4-ஆவது பெரிய மாநிலம் தமிழ்நாடு.

தேசிய அளவில் 6% மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.21% பங்களிப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளன.

பணவீக்கம் குறைவான 20 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 8ம் இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி 32.1%இல் இருந்து 34.4%ஆக உயர்ந்துள்ளது.

உர பயன்பாடு 9.65 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 10.68 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்வு.

error: Content is protected !!