திருப்பூர் மாவட்டம் அவிநாசி, துலுக்கமுத்தூர், ஊஞ்சபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி (வயது 84). இவரின் மனைவி பர்வதம் (வயது 70). இந்த முதிய தம்பதி தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இவர்களின் குழந்தைகளுக்கு திருமணம் முடிந்து, குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இதனால் தோட்டத்தில் தம்பதி மட்டும் தனியாக தங்கி இருக்கின்றனர்.
இன்று காலை இவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து வெளியே வராத நிலையில், பக்கத்து தோட்டத்தில் இருப்பவர் சந்தேகப்பட்டு சென்று பார்த்தபோது, அங்கு இருவரும் படுகாயங்களுடன் சடலமாக கிடந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து விசாரணையை தொடங்கினர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட தம்பதி வீட்டில் நகை, பணம் இருந்ததா, அதற்காக கொலை நடந்ததா, அல்லது முன்விரோதமா என போலீசார் துப்புதுலக்கி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வருடம் பல்லடம் தோட்ட வீட்டில் முதிய தம்பதி, அவரின் மகன் என 3 பேர் கொலை செய்யப்பட்டனர். அந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனிடையே, மீண்டும் அதே பாணியில் கொலை நடந்துள்ளது. இரண்டு இடங்களில் நடந்த கொலைகளிலும் ஒரே கும்பல் தான் ஈடுபட்டதாக என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.