திருச்சி கலெக்டர் அலுவலகத்தின் அருகில் உள்ள பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு உள்ளது. தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவு யூனிட்டுகள், விவி பேட் ஆகியவை இங்கு தான் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த கிடங்கில் வருடத்திற்கு 4 முறை, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு நடத்த வேண்டும். அதன்படி இன்று திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் ஆய்வு நடத்தினார்.
அவருடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் சென்றனர். கிடங்கை திறந்து அங்கு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும், சீல் உடைக்கப்படாமல் அப்படியே இருக்கிறதா என கலெக்டர் ஆய்வு செய்தார். இதனை அரசியல் கட்சியினரும் பார்வையிட்டனர்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் பிரதீப் குமார் கூறியதாவது: இங்கு 16ஆயிதத்து 76 வாக்குப்பதிவு எந்திரங்களும், 8637 யூனிட்டுகள், 3990 விவி பேட்கள் வைக்கப்பட்டு உள்ளன. அவை பாதுகாப்புடன், சீல் உடைக்கப்படாமல் இருப்பதை இன்று ஆய்வின் மூலம் உறுதி செய்தோம். வருடத்திற்கு 4 முறை இதனை ஆய்வு செய்ய வேண்டும். அடுத்த முறை ஆய்வு செய்யும்போதும் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.