கோவையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு அனுமதியின்றி பேனர், கட்அவுட் வைத்ததாக அதிமுக வார்டு செயலாளர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி இல்லத் திருமண வரவேற்பு விழா நேற்று முன்தினம் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவிற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க பிரமாண்ட அலங்கார வளைவுகள், பேனர்கள், கட்அவுட்கள், கட்சி கொடிகள் ஜென்னி ரெசிடென்சியில் இருந்து கொடிசியா வளாகம் வரை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் காவல் துறை அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்ததாக பீளமேடு போலீசார் அதிமுக வார்டு செயலாளர் லட்சுமணன் என்பவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். எஸ்பி வேலுமணி மகனின் திருமணம் ரூ.500 கோடி செலவில் பிரமாண்டமாக நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.