ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாத தமிழ்நாடு அரசை கண்டித்து மார்ச் 19ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆட்டோ ஓட்டுனர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை புரசைவாக்கத்தில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மார்ச் 19ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னையில் ஆட்டோ ஓடாது. 1 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளன. CITU உள்ளிட்ட 11 சங்கங்கள் போராட்டத்தில் கலந்துகொள்கிறது. ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. தற்போது குறைந்தபட்சம் 25 ரூபாயும் ஒரு கிலோமீட்டருக்கு 12 ரூபாயும் ஆட்டோ கட்டணம் உள்ளது. குறைந்தபட்சம் 50 ரூபாயும் கிலோ மீட்டருக்கு 25 ரூபாயும் மீட்டர் கட்டணம் உயர்த்தி வழங்க திமுக அரசுக்கு சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன. ஆனால் ஆட்டோ மீட்டர் கட்டண தொடர்பான ஆவணங்கள் நான்கு ஆண்டுகளாக முதலமைச்சர் மேஜையில் கிடப்பில் கிடக்கின்றன.
மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்காததால் தனியார் செயலிகள் பலனடைந்து வருவதாக சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தமிழ்நாடு அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் (ஓலா) (யூபர்)போன்று அரசு செயலியை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே ஆட்டோ தொழிற்சங்கங்களின் கோரிக்கை. ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களை குற்றவாளிகளை போல சித்தரிக்கும் (QR code )கோடு ஆட்டோவில் ஒட்ட முதலமைச்சர் திட்டத்தினை துவங்கி வைத்துள்ளார். இதற்கும் ஆட்டோ தொழிற்சங்கங்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ளது.