திரும்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ரகாரம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டு வியாபாரி முத்து (28 )இவருடைய மனைவி இரமாவதி இவர்களுக்கு இரண்டு வயதில் தியா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த ரமாவதி இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக கடந்த புதன்கிழமை வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு குழந்தை பிறந்த
நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரமாவதியை டிச்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அக்ரஹாரம் அருகே இராசன்வட்டம் பகுதியில் உள்ள ரமாவதியின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கேயே முத்துவும் தங்கி இருந்துள்ளார்.
அதனைதொடர்ந்து இன்று அக்ரஹாரம் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு முத்து சென்றுள்ளார் அப்போது வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பீரோவை பார்த்தபோது பீரோவில் இருந்து 46 சவரன் தங்க நகை மற்றும் ஆடு வியாபாரம் செய்வதற்காக வைத்திருந்த 9 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து இது குறித்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் பின்பக்க கதவு உடைத்து வீட்டில் இருந்த 46 சவரன் தங்கநகை மற்றும் ஒன்பது லட்சம் பணம் கொள்ளைபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.