Skip to content

அரசு பஸ்கள் வராததால் அவதி, அமைச்சர் மகேஸ் கவனிப்பாரா?

  • by Authour

திருச்சி மாநகராட்சியின்  ஒரு பகுதி  கீழ கல்கண்டார் கோட்டை, மேலகல்கண்டார்கோட்டை,  கீழக்குறிச்சி.   இது  பள்ளிக்கல்வித்துறை   அமைச்சர்  அன்பில் மகேசின்  திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதி.

இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்    பள்ளி, கல்லூரிக்காக   திருச்சிக்கு  செல்கிறார்கள்.  இதுதவிர  அரசு பணி, தனியார் பணி, கூலி வேலை,  சிறு வியாபாரங்கள் என  ஏராளமான மக்கள் திருச்சி சத்திரம்,  மத்திய பஸ் நிலையங்களுக்கு  தினந்தோறும் செல்கிறார்கள்.

இவர்களின் வசதிக்காக  பல வருடங்களாக  அரசு  டவுன்  பஸ்கள்,  சத்திரம்-கீழக் குறிச்சி,    மத்திய பஸ்நிலையம்-கீழகுறிச்சி  வழித்தடங்களில்  இயக்கப்பட்டு வந்தது. அதிகாலை 4. 30 மணிக்கு முதல் பஸ்  கீழக்குறிச்சியில் இருந்து  சத்திரத்திற்கு புறப்படும்.

அதைத்தொடர்ந்து 6 மணி,  7 மணி,  7.30,  8.30 மணி, 9 மணி என தொடர்ந்து  அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.  ஆனால் தற்போது அதிகாலை 6 மணி வரை அரசு டவுன் பஸ்கள் இங்கு வருவதே இல்லை.  7 மணி, 7.30 மணி டவுன் பஸ்களும் பெரும்பாலான நேரங்களில் வருதில்லை.

தற்போது பள்ளிகளில்  அரசு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.  தேர்வுக்கு  செல்லும் மாணவ, மாணவிகள்  அரசு பஸ்களை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையிலும் அரசு பஸ்கள்  வருவதே இல்லை. இதனால் தேர்வுக்கு செல்வோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

நேற்றும் இதுபோல அரசு  பஸ்கள்  எந்த அறிவிப்புமின்றி  நிறுத்தப்பட்டு விட்டது.  இதனால்  தேர்வு மையத்திற்கு செல்ல இருந்த மாணவ, மாணவிகள்  வேறு  வழியின்றி  100 ரூபாய், 150 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் சென்று உள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் தொகுதியிலேயே  அரசு பஸ்கள் முறையாக வருவதில்லை என  கீழக்கல்கண்டார்கோட்டை, மேலகல்கண்டார்கோட்டை,  கீழக்குறிச்சி மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். . பொதுமக்கள், மாணவர்கள்  படும் அவதியை அறிந்து   அமைச்சர் மகேஸ்   உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள்  அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் கோரிக்கை நிறைவேறாவிட்டால்  பஸ்களை சிறைபிடிப்போம் என்றும் அந்த பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

 

 

error: Content is protected !!