கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன்துறை காவிரி கரை அருகே கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாக நதிக்கரையில் வடக்கு நோக்கி அமைந்த புகழ் பெற்ற சிவஸ்தலம் ஆகும்.
மேலும் முருகன் விஷ்ணு பிரம்மன் ஆகியோரால் பூஜிக்கப்பட்டும், திருநாவுக்கரசர் அப்பர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோரால் தேவாரம் பாடப்பட்ட சிவஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.
இக்கோவிலில் மாசி மகப் பெருந்திருவிழாவினை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி உற்சவர் அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் யாழி, கருடன் அன்னம், குதிரை, கஜ, இந்திர விமானம் வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா கண்டார்.
மாசி மகத் திருவிழாவின் 09 ஆம் நாள் நிகழ்ச்சி ஆன இன்று திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சோமஸ்கந்தர் பெரியநாயகர் அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய திருத்தேரினை பக்தர்கள், பொதுமக்கள் ஓம் நமச்சிவாயா, ஹர ஹர மஹாதேவா என நாமங்கள் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
மேலும் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தார். வழி நெடுங்கிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இதில் குளித்தலை பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பல்வேறு சிவத்தொண்டு அமைப்பினர்கள், நீர் மோரும், அன்னதானமும் வழங்கினார்.