கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 22). அவரது காதலியான அதே முகவரியைச் சேர்ந்த எலன்மேரி (21), இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். மாதா கோவில் பின்புறம் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய இருவரும் மறுதினமே வேளாங்கண்ணி மாதா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று மாலை வேளாங்கண்ணி ரயில் நிலையம் அருகே கருவைக் காட்டில் ஜனார்த்தனன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வேளாங்கண்ணி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அங்கு அழுதுகொண்டிருந்த மனைவி எலன்மேரியிடம் வேளாங்கண்ணி பொறுப்பு காவல் ஆய்வாளர் சுப்ரியா நடத்திய விசாரணையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த தனது கணவரின் நண்பர்கள் சாகர் , ஜீவா இருவரும் எங்கள் அறையில் தங்கினார்கள் என்றும், எனது கணவரை அழைத்துக்கொண்டு மேற்கண்ட இருவரும் வெளியே சென்றார்கள் என்றும், திடிரென என்னிடம் வந்து உனது கணவர் ஜனார்த்தனனை ரயில்வே ஸ்டேஷன் அருகில் கொலை செய்து போட்டு விட்டோம் எனவும் தெரிவித்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர் என்றும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து விசாரணையை துரிதப்படுத்திய வேளாங்கண்ணி போலீசார் ஜனார்தனனை கொலை செய்துவிட்டு பெங்களூர் தப்ப முயன்ற சாகர் , ஜீவா ஆகிய இருவரையும் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு வந்து இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட ஜீவாவும், எலன் மேரியும் ஒரே கல்லூரியில் படித்தது தெரிய வந்தது.
பின்னர் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் எலன் மேரியும், ஜீவாவும் காதலித்து வந்ததும், இதற்கு இடையூறாக இருந்த ஜனார்த்தனனை தீர்த்துக்கட்ட திட்டம்போட்டதும் தெரியவந்தது. பின்னர் சாகர் , ஜீவா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளாங்கண்ணி போலீசார் எலன் மேரியை கஸ்டடி எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே எலன் மேரிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தர்மபுரியில் முதல் திருமணம் நடந்துள்ளதும், அதன்பிறகு இரண்டாவதாக ஜனார்த்தனனை திருமணம் செய்து கொண்டதும் பிறகு அவரையும் பிடிக்காமல் மூன்றாவது திருமணம் செய்துகொள்ள கொலை நாடகத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.