Skip to content

 அரியலூர் மழவராயர் பட்டாபிஷேக விழா கோலாகலம்…

பூர்வ காலம் தொட்டு   தமிழகத்தை ஆட்சி செய்து வந்தவர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்.இவர்களில் சேரர் வழி வந்தவர்கள், அரியலூர் பகுதியில் மழவராயர் என்ற பட்டப் பெயருடன் 1740ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வந்தனர். ராஜேந்திர சோழனின் மகனான வீர ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டில் அரியலூர் மழவராயர்கள் என  குறிப்பிடப்படுகின்றனர். சங்க இலக்கியங்களில் குறிக்கப்படும் மழவர் வழிவந்தவர்கள் இவர்கள் என்று  உ. வே. சாமிநாத ஐயர் எழுதியுள்ளார். விஜயநகர அரசர்கள் காலத்தில் இவர்கள் பாளையக்காரர்களாகவும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜமீன்தார்களாகவும் இவர்கள் அதிகாரம்

செலுத்தி வந்தனர்.

பழைய தென்னார்க்காடு மாவட்டத்தின் பல கோயில்களுக்கு திருப்பணிகளையும் இவர்கள் செய்துள்ளனர். ஏலாக்குறிச்சியில் உள்ள வீரமாமுனிவர் கிறிஸ்தவ தேவாலயம் கட்டவும் நில தானம் அளித்துள்ளார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் ஜமீன் முறை ஒழிக்கப்படும் வரையிலும் இவர்களது திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

அதிகாரத்தை இழந்தாலும் அரசு குடும்பங்களுக்கு உரிய பாரம்பரிய நடைமுறைகளை இவர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் மழவராயர்களின் வாரிசான கே. ஆர். துரை விஜய ஒப்பில்லாத மழவராயர் 21வது அரசராக முடி சூட்டிக் கொள்ளும் விழா இன்று நடைபெற்றது.

இதற்கான விழா அரியலூர் மழவராயர்களின் குலதெய்வக் கோவிலான ஒப்பில்லாத அம்மன் கோவிலில் நேற்று  யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 11 ஆழ்வார்களில் ஒருவரும், சேர மன்னருமான குலசேகர ஆழ்வார், அவதரித்த மாசி புனர்பூச நட்சத்திரத்தில் இந்த விழா தொடங்கப்பட்டது.

இன்று திங்கட்கிழமை பட்டாபிஷேகம் நடைபெற்றது. அரியலூரின் 21 வது ஜமீன்தாராக கே. ஆர். துரை விஜய ஒப்பில்லாத மழவராய பட்டம் ஏற்றுக் கொண்டார். பாரம்பரிய வழக்கப்படி கோவில் வளாகத்தில் அவருக்கு ஒப்பில்லாத அம்மன் முன்பு பாரம்பரிய ஜமீன் உடை அணிந்து வீரவாள் ஏந்தி வந்த ஜமீன்தார் துரைக்கு  அரியலூர் சமஸ்தான குலகுரு ஸ்ரீ ரவிசங்கர குருக்கள் பட்டம் சூட்டி அரச கிரீடம் வைத்து பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.

அரியலூர் மழவராயர்களின் உறவினர்கள், பிச்சாவரம் ஜமீன்தார் குடும்பத்தினர் மற்றும் அரியலூர் நகரில் உள்ள பலரும் நேரில் வருகை தந்து ஜமீன்தாராக பட்டம் ஏற்றுக்கொண்ட துரைக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ஒப்பில்லாத அம்மன் ஆலயத்தில் இருந்து ஜமீன்தார் துரை ஊர்வலமாக சென்று அரண்மனையில் அரண்மனை பிரவேசம் செய்தார்.
இதுவரை பார்த்திராத அரச பட்டாபிஷேக விழா என்பதால் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்திருந்து விழாவை பார்வையிட்டனர்.

error: Content is protected !!