தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகத்தில், மாவட்ட வன அலுவலர் ஆனந்த குமார் உத்தரவின் படி, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
பட்டுக்கோட்டை செல்லிகுறிச்சி ஏரி, கரிசக்காடு பெரிய ஏரி, அதிராம்பட்டினம் உப்பளம், மனோரா கடற்கரை, சிவலிங்கம் ஏரி, குறிச்சி ஏரி ஆகிய பேராவூரணி, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 6 இடங்களில் ஈர நிலப்பரப்புகள் மற்றும் நிலப்பரப்புகளில் காலை 5.30 பறவைகள் இரை தேட புறப்படும் நேரம் தொடங்கி, திரும்பி கூட்டை வந்தடையும் மாலை 6.30 மணி வரை இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த
கணக்கெடுப்பின் போது, பறவைகளின் இனம், எண்ணிக்கை, அவைகள் எங்கிருந்து வருகின்றன என்பது போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் அதிரம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி, ஏனாதி ராஜப்பா கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என 35 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக வனத்துறை சார்பில், அவர்களுக்கு பறவைகளைப் பற்றிய விழிப்புணர்வும், கணக்கெடுப்பு குறித்த அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.
கணக்கெடுப்பில் பாம்புத்தாரா, மீசை ஆலா, உள்ளான், சாம்பல் மடையான், நத்தை கொத்தி, நாரை, கொக்கு, முக்குளிப்பான், மீன் கொத்தி குள்ள தாரா, நாமக்கோழி, சாம்பல் நாரை போன்ற பறவைகள் காணப்பட்டன. தொலைநோக்கிகள், புகைப்படக்கருவிகள் கணக்கெடுப்புக்கு பயன்படுத்தப்பட்டன.
இதில், வனவர் சிவசங்கர், வனக்காப்பாளர்கள் பாரதிதாசன், கலைச் செல்வன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்துக் கொண்டனர். நிறைவாக கலந்து கொண்ட கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.