மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன், தமிழ்நாட்டின் கல்விக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2156 கோடியை தராமல் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது. வஞ்சிக்கிறது. இது கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது. புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காததால் மத்திய அரச பழிவாங்குகிறது என்றார்.
இதற்கு கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுந்து பதிலளித்தார். அப்போது அவர், பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் தமிழக அரசுதனது நிலைப்பாட்டை மாற்றி விட்டது. முதலில் கையெழுத்து போட்டு விட்டு பின்னர் U turn அடித்து விட்டது. ஆனால் காங்கிரஸ் ஆளும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் கூட இதனை ஏற்றுக்கொண்டு இருக்கிறது. இதனால் தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துள்ளது, திமுக மொழியை வைத்து அரசியல் செய்கிறது. இ து தொடர்பாக தமிழக அரசுடன் பேச நாங்கள் தயார் என்றார்.
அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ‘ தமிழ்நாட்டின் உரிமையை பறிக்காதே, நிதி வேண்டும், நீதி வேண்டும்’ என தமிழிலேயே முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் மீண்டும் அவைக்குள் வந்தனர். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா சபையை நடத்திக்கொண்டிருந்தார். திமுக எம்.பிக்கள் தொடர் முழக்கம் காரணமாக அவையை 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.