உச்சநீதிமன்ற உத்தரவுபடி அதிமுக பொதுக்குழு உறுப்பினராக யாரை தேர்வு செய்யலாம் என்ற சுற்றறிக்கையை எடப்பாடி தரப்பினர் அனுப்பி ஆதரவு திரட்டினர். அந்த ஒப்புதல் கடிதங்களை எடுத்துக்கொண்டு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று டில்லி சென்று தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார். அவருடன் அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம், அதிமுக வக்கீல் இன்பதுரை ஆகியோரும் சென்றனர். அதைத்தொடர்ந்து சி.வி. சண்முகம் கூறியதாவது:
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மொத்தம் 2665 பேர் இவர்களில் சிலர் வேறு கட்சிக்கு சென்றதாலும், சிலர் எம்.பி. பதவி முடிந்ததாலும் 2646 பேர் தான் தற்போது பொதுக்குழு உறுப்பினர்கள். இவர்களுக்கு அதிமுக வேட்பாளர் தேர்வுக்கான சுற்றறிக்கை நேரிலும், தபால் மூலமும், மெயில் மூலமும் அனுப்பி வைக்கப்பட்டது.
அதிமுக வேட்பாளராக கே. எஸ் தென்னரசுவை தேர்வு செய்கிறேன், அல்லது இல்லை, அல்லது வேறு ஒரு நபரை பரிந்துரை செய்கிறேன் என்ற 3 வாய்ப்புகளுடன் அந்த தேர்வு சீட்டு இருந்தது. 2646 பேருக்கு அனுப்பபட்டதில் 2501 பேர் வாக்களித்தனர். 145 வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை. அந்த 2501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்குகள் அளித்த ஒப்புதல் கடிதத்தை தேர்தல் கமிஷனிடம் கொடுத்து விட்டோம். பெரும்பாலானவர்கள் தென்னரசு தான் வேட்பாளர் என வாக்களித்து உள்ளனர். தேர்தல் கமிஷன், உச்சநீதிமன்றத்துக்கு இந்த தகவலை தெரிவிப்பார்கள்.
நாளைக்கு மனுதாக்கல் செய்ய கடைசிநாள். 10ம் தேதி வாபஸ் பெற கடைசிநாள். எனவே விரைவில் உச்சநீதிமன்றம் இதுபற்றி தீர்ப்பு வழங்கும் .
ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்றது குறித்து கேட்டபோது, ஆடத்தெரியாதவர் மேடை சரியில்லை என்றாராம் என்று கூறிவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டார் சி.விசண்முகம்.