தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்தபங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.
இதற்கிடையே தான் நீண்ட நாட்களாக சிம்பொனி எழுதி வருவதாகவும், விரைவில் லண்டனில் அதை அரங்கேற்ற உள்ளதாகவும் இளையராஜா அறிவித்திருந்தார். அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற ஈவண்டின் அப்பல்லோ அரங்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றினார். பீத்தோவான் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற இசை மேதைகள் இசையமைத்த இந்த அரங்கில் தமிழரான இளையராஜா சிம்பொனி அரங்கேற்றம் செய்ததை உலகமே ஆர்வத்துடன் உற்று நோக்கியது.
இந்த சிம்பொனியை நாமும் பார்க்க வேண்டும் என இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அவரது அதி தீவிரமான ரசிகர்கள் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்கள். லண்டனில் உள்ள தமிழர்களும் குவிந்ததால், அரங்கமே கூட்டத்தால் நிரம்பியது. ரசிகர்களின் உற்சாக கைத்தட்டலுக்கு இடையே இளையராஜா ‘வேலியண்ட்’ என பெயரிடப்பட்ட சிம்பொனியை அரங்கேற்றினார்.
சினிமாக்களில்தான் இசையமைத்த பாடல்கள் சிலவற்றின் மெட்டையும் சிம்பொனி இசைக்கு தகுந்தவாறு வடிவமைத்து அவர் அரங்கேற்றினார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனா். குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் ‘ராஜா கைய வச்சா… அது ராங்கா போனதில்லை…’ என்ற பாடலின் இசை சிம்பொனியில் இடம் பெற்ற போது ரசிகர்கள் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. உலகின் மிகச்சிறந்த இசை குழுக்களில் ஒன்றான ராயல் பிலார்மாலிக் ஆர்கெஸ்ட்ரா இசை கலைஞர்களை வைத்துக் கொண்டு இளையராஜா இந்த சிம்பொனியை அமைத்தார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சிம்பொனி அரங்கேற்றம் நடந்தது. இறுதியாக தனது சிம்பொனியை முடிக்கும்போது, இளையராஜா தனது இசையில் இடம் பெற்ற பாடலான ‘இதயம் போகுதே…’ பாடலைப் பாடி அரங்கில் இருந்தவர்களை உருக வைத்தார். அவர் சிம்பொனியை முடித்தபோதுஅரங்கமே எழுந்து நின்று கைகளைத் தட்டியது. இளையராஜாவின் இசை மழையில் லண்டன் அரங்கமே நனைந்து போனது.
அப்போது ரசிகர்களை நோக்கி நடந்து வந்த இளையராஜா, அவர்களின் உற்சாகத்தை கண்டு ரசிகர்களுக்கு கைகூப்பி நன்றி கூறினார். கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் ‘லவ் யூ ராஜா’ என்று கோஷமிட, உடனே இளையராஜாவும், ‘லவ் யூ டூ’ என பதில் அளித்தார்.
35 நாட்களில் சிம்பொனி எழுதி, அதனை லண்டனில் அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி வரிசையில் இளையராஜாவும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இதையொட்டி திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சிம்பொனி இசைத்து சாதனை படைத்த இளையராஜா இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையம் வந்த அவருக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று இளையராஜாவை வரவேற்றார். பாஜக, விசிக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிரவாகிகளும் இளைஞராஜாவை வரவேற்றனர். இசை ரசிகர்களும் திரண்டு வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இளையராஜா கூறியதாவது: அரங்கேற்றம் செய்யப்பட்ட சிம்பொனியை இசையை யாரும் டவுன்லோடு செய்து கேட்காதீர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால் இங்கும் சிம்பெனி அரங்கேற்றம் செய்வேன். லைவாக கேட்டால் தான் அதன் உன்னதம் புாியும்.
சென்னைதொடர்ந்து அக்டோர் 6ம் தேதி துபாயில் ஆரம்பித்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்பட 13 நாடுகளில் சிம்பொனி அரங்கேற்றம் நடக்க இருக்கிறது. எந்த விஷயத்திலும் நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் இல்லை. அவரவர் துறையில் இளைஞர்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். லண்டனில் சிம்பொனி வெற்றிகரமாக அரங்கேற்றம் செய்தது மகிழ்ச்சி. இசை கோர்ப்பாளர் நிக்கி தாமஸ் தலைமையில் 80 பேர் நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்து கொடுத்தனர். ஆரம்பம் முதலே அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மகிழ்ச்சியோடு நீங்கள் வழி அனுப்பி வைத்ததால் இறைவன் வெற்றியை தந்தான். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு இளையராஜா கூறினார்.